28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்மலையக செய்திகள்

தமிழ் பொது வேட்பாளர் மலையகம் வருவார் – சி.வி.விக்னேஸ்வரன் அறிவிப்பு

‘‘எமது மலையக சகோதர சகோதரிகளும் கிழக்கிலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளும் நாம் யாவரும் தமிழ்ப் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் ஒன்றுசேர விரும்புவது மிகுந்த மகிழ்ச்சியை ஊட்டுகின்றது.’’ இவ்வாறு தெரிவித்திருக்கிறார் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன்.

அவர் வழங்கும் கேள்வி பதில் வடிவிலான அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

கேள்வி : நீங்கள் தமிழ் மக்களை ஒன்று சேர்ப்பதற்காக தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தியுள்ளதாகக் கூறுகின்றீர்கள். அப்படியானால், தமிழ்ப் பேசும் மலையகத் தமிழர்களும் கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களும் தமிழர்கள் இல்லையா? அவர்களை ஏன் உங்கள் தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்கும்படி கேட்கவில்லை?

பதில் : அரியநேத்திரன் பாராளுமன்றத்தில் மலையக மக்களுக்காக முன்னர் குரல் கொடுத்தவர். அவர் மலையக மக்களை சகோதர சகோதரிகளாகவே நேசிக்கின்றார். மலையக மக்கள் அவர் சார்பாக ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதை அவர் மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். தமிழர்கள் என்ற ரீதியில் மலையகத் தமிழர் ஒவ்வொருவரும் தமது மூன்று விருப்பு வாக்குகளில் ஒரு வாக்கை அவருக்கு அளிப்பதை அவர் கட்டாயமாக மனமுவந்து ஏற்றுக்கொள்வார்.

ஆனால் வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகள் வேறு, மலையக சகோதர சகோதரிகளின் பிரச்சினைகள் வேறு. எனினும், நாம் யாவரும் தமிழ்ப் பேசும் மக்களாக ஒன்றுசேரலாம். அதில் தவறில்லை. அது மட்டுமல்ல, 1977ஆம் ஆண்டு காலத்தில் மலையகத்திலே முடுக்கி விடப்பட்ட கலவரங்கள் காரணமாக அங்கிருந்து இடம்பெயர்ந்து வந்த பல மலையகத் தமிழர்கள் வன்னி மாவட்டத்தில் குடியேறியுள்ளார்கள்.

இப்பொழுது அவர்கள் எங்கள் மக்கள். வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் பாரம்பரிய உரிமைகள் அவர்களையும் சாரும். ஆகவே, தமிழ்ப் பேசும் மக்கள் எங்கிருந்தாலும் எமது தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க முன்வர வேண்டும். அவர்கள் சங்கு சின்னத்துக்கு வாக்களிப்பதை நாம் மனமகிழ்வுடன் வரவேற்கின்றோம். வடக்கு, கிழக்கு மாகாணத் தமிழ் மக்களிடையே இன்று ஒரு மறுமலர்ச்சி பரிணமித்திருக்கின்றது. உலக அரங்குகளில் எமது குரல் ஓங்கி ஒலிக்க நாம் ஒரு பலமான மக்கள் கூட்டம் என்ற உண்மையை நிலைநிறுத்துவது அவசியம்.

இவ்வாறான ஒரு தமிழ் மொழி சார்ந்த ஈடுபாடு மலையகத்திலும் கிழக்கு முஸ்லிம்கள் மத்தியிலும் ஏற்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதே. நாம் யாவரும் தமிழ்த் தாயின் மக்களே என்ற உணர்வை இந்த ஈடுபாடும் நிலைப்பாடும் ஏற்படுத்துகின்றன.

அண்மையில் 30க்கும் மேற்பட்ட மலையக புத்திஜீவிகள், அரசியல் பிரமுகர்கள், முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் போன்றோர் அரியநேத்திரனுடன் இணையவழியில் தொடர்பு கொண்டு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். தாம் யாவரும் ஒன்றுபட்ட தமிழினமாக தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பதாகவும் மற்றும் மலையகத்தில் அவரை ஆதரித்து தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்தனர்.

அத்துடன், பொது வேட்பாளரை மலையகத்துக்கு மக்கள் சந்திப்புக்காக அழைத்துள்ளனர். பொது வேட்பாளரும் அவர்கள் கூட்டத்தில் பங்குபற்ற ஒத்துக்கொண்டுள்ளார். நான் தொடக்கத்தில் இவ்வாறாக கோராததற்குக் காரணம் கிழக்கிலங்கை முஸ்லிம் தலைவர்கள் பலர் வடக்கு கிழக்கு இணைப்பை ஏற்க மறுக்கின்றார்கள். மலையகத் தமிழ்க் கட்சித் தலைவர்கள் நாம் எமது பாரம்பரிய உரிமைகளின் அடிப்படையில் எமது அரசியல் கோரிக்கைகளை முன்னிறுத்துவதை அவ்வளவாக வரவேற்கவில்லை. பெரும்பான்மை வேட்பாளர்களுடன் சேர்ந்தே பயணிக்க வேண்டும் என்று விரும்புகின்றார்கள்.

ஆனால், இப்பொழுது எமது மலையக சகோதர சகோதரிகளும் கிழக்கிலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளும் நாம் யாவரும் தமிழ்ப் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் ஒன்றுசேர விரும்புவது மிகுந்த மகிழ்ச்சியை ஊட்டுகின்றது. பொது வேட்பாளர் கட்டாயமாக வடக்கு, கிழக்கு பிரமுகர்களை மலையக பிரசாரப் பணிகளுக்காக அனுப்பி வைப்பார் என்று நம்புகின்றேன்.

Related posts

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை விரைவில்!

sumi

இன்னும் பல ஆச்சரியங்கள் வெளிவரும் – அனுர.!

sumi

மருந்து நிறுவனங்கள் மீது விசாரணை.!

sumi

Leave a Comment