முல்லைத்தீவு (Mullaitivu) கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றின் பழைய மாணவர்கள் பாடசாலையின் நலன்சார்ந்து தன்னார்வமாக செயற்பட்டுள்ளனர்.
அடுத்தடுத்து அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் சமூக நலப் பணிகளையிட்டு கல்விச் சமூகத்தினர் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
பாடசாலையுடன் தொடர்புகளை வலிந்து ஏற்படுத்தி தேவைகளை அறிந்து அவற்றை தம்மாலான அளவுக்கு செய்து கொடுத்து வருகின்றனர்.
பாடசாலையில் உள்ள குடிநீர்க் கிணறு, குடிநீர் தொட்டி என்பவற்றை சுத்தம் செய்து கொடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு உடுப்புக்குளம் தமிழ் வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் குழுவொன்று 04.09.2024 அன்றைய நாளில் பாடசாலைக்கு சமூகமாகி தாமாக முன்வந்து குடிநீர்க்கிணறு மற்றும் குடிநீர் தாங்கி என்பனவற்றினை சுத்தம் செய்து கொடுத்துள்ளார்கள்.
பாடசாலை சமூகம் சார்பாக அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அவர்களுக்கு தங்கள் நன்றிகளை உடுப்புக்குளம் தமிழ் வித்தியாலய நிர்வாகம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பாடசாலை நிர்வாகத்துடன் சுமுகமான உறவைப் பேணி அவர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் பாடசாலையின் வினைத்திறன் மிக்க செயற்பாடுகளுக்கு உதவ முடியும் என பழைய மாணவர் ஒருவர் குறிப்பிடுகின்றார்.
நாளாந்த வேலைத்திட்டங்களை திட்டமிடும் போது மாதத்தில் ஒரு நாளையேனும் நாம் படித்த பாடசாலையுடன் கலந்துரையாடி செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
அதன் மூலமும் நாம் மனத்திருப்தி அடையலாம்.அத்தோடு இவ்வாறான செயற்பாடுகள் இப்பாடசாலையில் இப்போது பயின்று வரும் மாணவர்களுக்கு நல்ல முன்னுதாரணமாக அமையும் என தான் நினைப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இது போலவே தான் தன் இனிவரும் நாட்களில் செயற்பாடுகளை திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தொடர்ந்து குறிப்பிட்டார்.
பழைய மாணவர்களின் இத்தகைய செயற்பாடுகளால் பாடசாலைகளில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை வினைத்திறனாக முன்னெடுத்துச் செல்வதில் இருக்கும் கடினங்களை குறைக்க முடியும் என்பதும் உணரத்தக்கதே..!