அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் , வேலைவாய்ப்பு கோரி கறுப்பு பட்டி அணிந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று ஞாயிற்றுக்கிழமை (1) முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது அம்பாறை மாவட்டம் காரைதீவு சந்திக்கு அருகாமையில் ஆரம்பமானதுடன் கறுப்பு பட்டி அணிந்து பல்வேறு சுலோகங்களை ஏந்தி பட்டதாரிகள் கொளுத்தும் வெயிலில் கவனயீர்ப்பு போராட்டத்தை அமைதியாக முன்னெடுத்துள்ளனர்.
இதன் போது இதுவரை வேலைவாய்ப்பு தொடர்பில் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை எனவும் உடனடியாக ஜனாதிபதி வேட்பாளர்கள் என கூறிக்கொள்வோர் வெளிப்படையாக பட்டதாரிகளின் நிலைமை குறித்து தகவல்களை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.
இக்கவனயீர்ப்பு போராட்டமானது அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் உதுமாலெப்பை முகமது முஹ்சீன் தலைமையிலும் செயலாளர் அப்துல் வஹாப் முப்லிஹ் அகமட் தலைமையிலும் இடம் பெற்றுள்ளது.
குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக ஏனைய வேலையற்ற பட்டதாரிகள் அழிக்காதே அழிக்காதே, எதிர்காலத்தினை அழிக்காதே, பட்டதாரிகள் வீதிகளில் நின்றால் நாடு முன்னேறுவது எவ்வாறு?, பட்டதாரிகள் எப்போதும் வீதிக்கு வருவது ஏன்?, போன்ற பதாகைகளை தாங்கியவாறு தமது தொழில் உரிமையினை வலியுறுத்தும் வகையிலான பல்வேறு கோசங்களையும் எழுப்பி உரிய தரப்பினர் தீர்வினை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை குறித்த போராட்டத்திற்கு பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.