28.4 C
Jaffna
September 19, 2024
விளையாட்டுச் செய்திகள்

லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் முதல் வெற்றியை ஈட்டும் குறிக்கோளுடன் இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கும் இலங்கை

ங்கிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது போட்டி கிரிக்கெட்டின் தாயகமான லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (29) ஆரம்பமாகியுள்ளது.

மென்ச்செஸ்டர், எமிரேட்ஸ் ஓல்ட் ட்ரபோர்ட் விளையாட்டரங்கில் இங்கிலாந்திடம் 5 விக்கெட்களால் அடைந்த தோல்வியை நிவர்த்தி செய்யும் குறிக்கோளுடனும் லோர்ட்ஸ் அரங்கில் முதலாவது வெற்றியை ஈட்டும் குறிக்கோளுடனும் இலங்கை அணி களம் இறங்கவுள்ளது.

இப்போட்டிக்கான இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக டெஸ்ட் கிரிக்கெட் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிவரும் குசல் மெண்டிஸ}க்குப் பதிலாக மூவகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசித்துவரும் பெத்தும் நிஸ்ஸன்க அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 2021இல் நடைபெற்ற  போட்டியின்மூலம் டெஸ்ட் அரங்கில் அறிமுகமான பெத்தும் நிஸ்ஸன்க கடைசியாக 2022இல் விளையாடியிருந்தார். அதன் பின்னர் உபாதை காரணமாக டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை.

9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஒரு சதம் உட்பட 5 அரைச் சதங்களைப் பெற்றுள்ளார்.

இதேவேளை, முதலாவது டெஸ்ட் போட்டியில் காயத்திற்குள்ளாகி தற்காலிக ஓய்வு பெற்று மீண்டும் துடுப்பெடுத்தாடிய தினேஷ் சந்திமால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் துடுப்பாட்ட வீரராக மட்டும் விளையாடவுள்ளார். அவருக்குப் பதிலாக விக்கெட் காப்பாளராக நிஷான் மதுஷ்க செயற்படவுள்ளார்.

ஒட்டுமொத்தத்தில் துடுப்பாட்டத்தைப் பலப்படுத்திக்கொண்டே இந்த டெஸ்ட் போட்டியை இலங்கை எதர்கொள்ளவுள்ளது.

இது இவ்வாறிருக்க, பந்துவீச்சிலும் இலங்கை அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேகப்பந்துவீச்சாளர் விஷ்வா பெர்னாண்டோவுக்குப் பதிலாக லஹிரு குமார அணியில் பெயிரிடப்பட்டுள்ளார்.

தற்போதைய இலங்கை அணியில் இடம்பெறும் ஏஞ்சலோ மெத்யூஸ், திமுத் கருணாரட்ன, தினேஷ் சந்திமால், குசல் மெண்டிஸ் ஆகிய நால்வரே இதற்கு முன்னர் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் விளையாடியுள்ளனர். மற்றைய அனைவரும் இந்த மைதானத்தில் முதல் தடவையாக விளையாடவுள்ளதுடன் லோர்ட்ஸ் அரங்கில் விளையாடும் அவர்களது கனவு நனவாகவுள்ளது.

அவர்களில் குசல் மெண்டிஸுக்கு இரண்டாவது தடவையாக லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் விளையாட சந்தர்ப்பம் கிடைக்காமல் போயுள்ளது.

இந்த விளையாட்டரங்கில் இரண்டு அணிகளும் மோதிக்கொண்ட 8 சந்தர்ப்பங்களில் இங்கிலாந்து 2 தடவைகள் வெற்றிபெற்றுள்ளது. மற்றைய ஆறு போட்டிகளும் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ளது.

இந்த மைதானத்தில் இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் தாராளமாக ஓட்டங்கள் குவித்துவந்துள்ளதை கடந்த கால போட்டிகள் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது.

எனவே இன்று ஆரம்பமாகவுள்ள போட்டியிலும் இலங்கை வீரர்கள் கணிசமான ஓட்டங்களைக் குவித்து இங்கிலாந்துக்கு சவால் விடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலாவது டெஸ்ட் போட்டியில் துடுப்பாட்டத்தில் பொறுமையையும் நிதானத்தையும் கடைப்பிடிக்கத் தவறியதாலும் பந்துவீச்சில் சரியான வியூகங்களை கடைப்பிடிக்காததாலும் இலங்கை அணி தோல்வியைத் தழுவியது.

ஜோ ரூட் எந்தளவு பொறுமையாகத் துடுப்பெடுத்தாடி இங்கிலாந்து அணியின் வெற்றியை உறுதிசெய்தாரோ அதேபோன்று பொறுமையை இலங்கை வீரர்கள் கடைப்பிடிப்பது அவசியமாகும்.

இலங்கையின் நம்பிக்கை நட்சத்திரமாக வெகுவாக முன்னேறிவரும் கமிந்து மெண்டிஸ் இந்தப் போட்டியிலும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அசத்துவார் என நம்பப்படுகிறது.

தனது முதல் 4 டெஸ்ட்களில் 3 சதங்களைக் குவித்துள்ள கமிந்து மெண்டிஸ், லோர்ட்ஸ் அரங்கில் சதம் குவிக்க வேண்டும் என்ற தாகத்துடன் இந்தப் போட்டியை எதிர்கொள்ளவுள்ளார்.

அனுபவசாலிகளான ஏஞ்சலோ மெத்யூஸ், திமுத் கருணாரட்ன, தினேஷ் சந்திமால் ஆகியோரும் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா, நிஷான் மதுஷ்க ஆகியோரும் நெடு நேரம் துடுப்பெடுத்தாடி கணிசமான ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து அணியைப் பலப்படுத்துவார்கள் என கருதப்படுகிறது.

இதேவேளை வேகப்பந்துவீச்சாளர்களும் சுழல்பந்துவீச்சாளர்களும் மாறுபட்ட வியூகங்களைப் பிரயோகித்து எதிரணி துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்கவேண்டும். அல்லது லோர்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து ஓட்ட மழை குவிப்பதை தடுக்க முடியாமல் போகும்.

மறுபக்கத்தில் முதலாவது டெஸ்டில் கடுமையாக போராடி வெற்றியீட்டிய இங்கிலாந்து, தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணிகள்

இலங்கை: திமுத் கருணாரட்ன, நிஷான் மதுஷ்க, பெத்தும் நிஸ்ஸன்க, ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா (தலைவர்), கமிந்து மெண்டிஸ், மிலன் ரத்நாயக்க, பிரபாத் ஜயசூரிய, அசித்த பெர்னாண்டோ, விஷ்வா பெர்னாண்டோ.

இங்கிலாந்து: பென் டக்கட், டான் லோரன்ஸ், ஒல்லி போப் (தலைவர்), ஜோ ரூட், ஹெரி புறூக், ஜெமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், மெத்யூ பொட்ஸ், ஒல்லி ஸ்டோன், ஷொயெப் பஷிர்.

Related posts

பெட்ரோல் ஊற்றி கொழுத்திய முன்னாள் காதலன் ; உகண்டாவில் ஒலிம்பிக் வீராங்கனை பலி

User1

விராட் கோஹ்லியை விமர்சித்த தினேஷ் கார்த்திக்

User1

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனையில் இடம்பெற்ற இந்தியாவின் நொய்டா மைதானம்

User1

Leave a Comment