28.4 C
Jaffna
September 19, 2024
விளையாட்டுச் செய்திகள்

இங்கிலாந்துக்கான டெஸ்ட் சதங்கள் சாதனையை சமப்படுத்தினார் ஜோ ரூட்; கஸ் அட்கின்சனும் துடுப்பாட்டத்தில் அபாரம்

இலங்கைக்கு எதிராக லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (29) ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முன்னாள் தலைவர் ஜோ ரூட் 33ஆவது சதத்தைக் குவித்து இங்கிலாந்துக்கான டெஸ்ட் சதங்கள் சாதனையை சமப்படுத்தியதுடன் அணியை பலமான நிலையில் இட்டார்.

மத்திய வரிசையில் 8ஆம் இலக்க வீரர் கஸ் அட்கின்சனும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி தனது ஐந்தாவது டெஸ்டில் கன்னி அரைச் சதத்தைப் பூர்த்தி செய்தார்.

இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து இன்றைய முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்களை இழந்து 358 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இப் போட்டியில் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்த இலங்கை, ஆரம்பத்தில் 2 விக்கெட்களை வீழ்த்தி சிறப்பான நிலையில் இருந்தது.

ஆனால், ஜோ ரூட் களம் புகுந்ததும் நிலைமை இங்கிலாந்துக்கு சாதகமாகத் திரும்பியது.

42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்கள் என்ற இக்கட்டான நிலையில் களம் புகுந்த ஜோ ரூட், மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி இலங்கை பந்துவீச்சாளர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி மூன்று இணைப்பாட்டங்களில் பங்களிப்பு செய்து அணியைப் பலப்படுத்தினார்.

மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஜோ ரூட் தனது 145ஆவது டெஸ்ட் போட்டியில் 33ஆவது சதத்தைப் பெற்று, இங்கிலாந்து சார்பாக அதிக டெஸ்ட் சதங்கள் குவித்த அலஸ்டெயார் குக்கின் சாதனையை சமப்படுத்தினார்.

சமகால டெஸ்ட் அரங்கில் அதிசிறந்த துடுப்பாட்ட வீரராக விளங்கும் ஜோ ரூட், அதிக சதங்கள் குவித்தவர்கள் வரிசையில் 10ஆவது இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அத்துடன் டெஸ்ட் போட்களில் அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் வரிசையில் 12274 ஓட்டங்களுடன் 7ஆம் இடத்தில் இருக்கிறார். இங்கிலாந்து வீரர்களில் அலஸ்டெயார் குக்கைவிட 198 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

இன்றைய போட்டியில் பென் டக்கெட்டுடன் 3ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களையும் ஹெரி ப்றூக்குடன் 5ஆவது விக்கெட்டில் 62 ஓட்டங்களையும் கஸ் அட்கின்ஸுடன் 7ஆவது விக்கெட்டில் 92 ஓட்டங்களையும் ஜோ ரூட் பகிர்ந்தார்.

ஜோ ரூட் 206 பந்துகளை எதிர்கொண்டு 18 பவுண்டறிகளுடன் 143 ஓட்டங்களைப் பெற்றார்.

ஆட்டநேர முடிவில் கஸ் அட்கின்சன் 74 ஓட்டங்களுடனும் மெத்யூ பொட்ஸ் 20 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

அவர்களை விட பென் டக்கட் 40 ஓட்டங்களையும் ஹெரி ப்றூக் 33 ஓட்டங்களையும் ஜெமி ஸ்மித் 21 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் லஹிரு குமார 75 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மிலன் ரத்நாயக்க 80 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 84 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Related posts

லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் முதல் வெற்றியை ஈட்டும் குறிக்கோளுடன் இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கும் இலங்கை

User1

தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய வீராங்கனை: தொடரும் வழக்கு விசாரணை

User1

இலங்கை அணி சிறந்த கிரிக்கெட்டை ஆடியது..ரோஹித் சர்மா பேட்டி..

User1

Leave a Comment