காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் நேற்று (28) மாலை ஹோட்டல்கள், உணவகங்கள் சிற்றுண்டிச்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையின் போது மனிதப் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் மற்றும் காலாவதியான உணவுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் முரளீஸ்வரன் மேற்பார்வையில் அவரின் ஆலோசனையில் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
பொது சுகாதார பரிசோதர்கள் ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டு, காத்தான்குடி பிரதான வீதி உட்பட காத்தான்குடியின் பல்வேறு இடங்களிலுமுள்ள ஹோட்டல்கள், உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் இதன்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இப்பரிசோதனை நடவடிக்கையின் போது மனிதப்பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் மற்றும் காலாவதியான உணவுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறான உணவகங்கள், ஹோட்டல்கள், சிற்றுண்டிச்சாலைகளின் உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சுகாதார அதிகாரிகளினால் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.