இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி மான்செஸ்டர், ஓல்ட் டிரபர்ட் மைதானத்தில் இன்று (21) ஆரம்பமாகவுள்ளது.
எட்டு ஆண்டுகளின் பின்னர் டெஸ்ட் தொடர் ஒன்றில் ஆடுவதற்காக இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணி கடும் சவாலுக்கு மத்தியிலேயே இந்த டெஸ்ட் தொடரில் களமிறங்கவுள்ளது. முன்னதாக நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி இங்கிலாந்து லயன்ஸிடம் தோல்வியை சந்தித்தது.
இந்தப் பயிற்சிப் போட்டியின் முதல் இன்னிஸில் இலங்கை வீரர்கள் துடுப்பாட்டத்தில் சோபிக்கத் தவறியதோடு பந்துவீச்சில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி இருந்தனர்.
எனினும் திமுத் கருணாரத்ன, அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால் மற்றும் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா போன்ற அனுபவம் மிக்க வலுவான துடுப்பாட்ட வரிசையை இலங்கை அணி பெற்றிருக்கும் நிலையில் எதிரணிக்கு சவால் விடுக்க முடியுமாக இருக்கும். பந்துவீச்சில் பிரபாத் ஜயசூரிய மற்றும் கசுன் ராஜித்த ஆகியோர் நம்பிக்கை தருகின்றனர்.
இலங்கை அணி கடைசியாக 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை அந்த அணி 0–2 என இழந்தது. இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை அணி டெஸ்ட் போட்டி மற்றும் தொடர் ஒன்றை வென்றது 2014 ஆம் ஆண்டில் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை டெஸ்ட் அணியின் இடைக்கால பயிற்சியாளர் சனத் ஜயசூரியவின் பயிற்சியின் கீழ் இந்த டெஸ்ட் தொடரில் ஆடுவதோடு இந்தத் தொடருக்காக விசேட துடுப்பாட்ட பயிற்சியாளராக இங்கிலாந்தின் இயன் பெல் நியமிக்கப்பட்டிருப்பது அணிக்கு சாதகமாக அமைய வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக அணியை தனது பாணியில் வழிநடத்தி வரும் சனத் ஜயசூரிய அண்மையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இலங்கை அணி வெற்றி பெற வழிநடத்தி இருந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து புதிதாக பாஸ்பால் கிரிக்கெட் பாணியை பின்பற்றி வரும் நிலையில் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் செயற்பாடுவது கட்டாயமாக உள்ளது.
கடைசியாக நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3–0 என முழுமையாக வெற்றி பெற்ற உற்சாகத்துடனேயே இங்கிலாந்து அணி இந்த டெஸ்ட் தொடரில் களமிறங்வுள்ளது. எனினும் உபாதைக்கு உள்ளான அணித் தலைவர் பென் ஸ்டொக்ஸ் மற்றும் ஆரம்ப வீரர் சக் கிரோலி இடம்பெறாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் உலக டெஸ்ட் சம்பியன்சிப் தொடரின் அங்கமாக இந்த டெஸ்ட் தொடர் அமைந்திருப்பதால் உலக டெஸ்ட் சம்பியன்சிப் கிண்ணத்தை வெல்வதிலும் இந்தத் தொடர் இரு அணிகளுக்கும் முக்கியமாக உள்ளது.
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்சிப் தரவரிசையில் இலங்கை அணி தற்போது 4 ஆவது இடத்தில் இருப்பதோடு இங்கிலாந்து 7 ஆவது இடத்தில் காணப்படுகிறது.