ரணில் தேர்தலில் வெற்றியீட்டினால் நாடு அபிவிருத்தி அடைந்த நாடாக மாறும் என ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகால ரட்னாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனாதிபதி இந்த நாட்டை பொறுப்பேற்று வரிசை யுகத்திற்கு முற்றுப் புள்ளிவைத்து மக்களின் இயல்பு வாழ்க்கையினை மீட்டுக்கொடுத்துள்ளார்.
இந்த நாட்டை பொறுப்பேற்ற நாள் முதல் ஜனாதிபதி அபிவிருத்தி தொடர்பிலேயே சிந்தித்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.
ரணில் இந்த நாட்டின் இரண்டு வருடங்களாக ஆட்சி செய்த காலப் பகுதியில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு பல நிவாரண சலுகைகளையும் வழங்கியுள்ளார்.
காணி உரிமையின்றி அவதிப்பட்ட 20 இலட்சம் குடும்பங்களுக்கு காணி உரிமையினையும் வழங்கி வருகின்றார்.
கொழும்பு நகரில் தொடர்மாடி குடியிருப்புக்களில் உள்ள 55 ஆயிரம் குடும்பங்களுக்கும் காணி உரிமை வழங்கி வருகின்றார்.
நாட்டு மக்கள் நெருக்கடியை எதிர்கொண்ட போது மக்கள் பண்டிகைகளையும் கொண்டாட முடியாத நிலையில் இருந்தனர். மக்களின் நலன் கருதி 20 இலட்சம் குடும்பங்களுக்கு அரிசி நிவாரணத்தையும் வழங்கியிருந்தார்.
பாடசாலை மாணவர்களின் நலன் தொடர்பாகவும் ஜனாதிபதி அதிக கவனம் செலுத்தியிருந்தார்.
2 வருடங்களுக்குள் நாட்டில் இந்தளவில் மாற்றங்களை ஏற்படுத்திய ஜனாதிபதி மேலும் 5 வருடங்களுக்கு இந்த நாட்டை ஆட்சி செய்யும் போது நாடு அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றமடையும்” என சாகால ரட்னாயக்க தெரிவித்துள்ளார்.