இலங்கை கடற்படை இந்திய எல்லைக்குள் வந்து தங்களுடைய படகுகளில் இருக்கின்ற பொருட்கள் ஜி.பி.எஸ் போன்ற கருவிகளை கொள்ளையடித்து செல்வதாக இந்திய தரப்பினர் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இதன் மூலம் இலங்கை கடற்படையை கடல் கொள்ளையர் என வர்ணிக்கின்றார்கள்.
இந்த குற்றச்சாட்டை முழுமையாக எதிர்ப்பதாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.வி.சுப்பகமணியம் தெரிவித்துள்ளார். நேற்று (11) மாலை அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறிப்பாக இந்தியா மற்றும் இலங்கை ஆகியன இறைமை உள்ள நாடுகள். அந்தவகையில் இந்திய கடற்படையினரோ, அல்லது இலங்கை கடற்படைனரோ எலலையைத் தாண்டி போக மாட்டார்கள், போகவும் முடியாது. எனவே எல்லை தாண்டி வந்து கொள்ளை அடிப்பது என்பது ஒரு அப்பட்டமான பொய் என நான் உறுதியாக கூறுகின்றேன்.
எமது கடல் எல்லைக்குள் வரும் இந்திய மீனவர்களை தான் நமது கடற்படை கைது செய்கின்றது. நல்ல எண்ணத்துடன் இருக்கின்ற சில கடற்கரையினர் அவர்களை கைது செய்யக்கூடாது என்ற எண்ணத்தோடு அவர்களை விரட்டியடிக்கின்றார்கள் இல்லாவிட்டால் அனைவரையும் கைது செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.
குறிப்பாக ஒரு நாளைக்கு இரண்டு படகுகளை கைது செய்தால் ஒரு மாதத்தில் 20 அல்லது 24 படகுகள் கைது செய்ய வேண்டிய ஏற்படும். 2016இல் இருந்து 2024 வரையான 8 வருடங்களுக்குள் அண்ணளவாக 2500 படகுகளை அவர்கள் கைது செய்திருக்க முடியும். பெரும்பாலும் ஒன்று இரண்டு படகுகளை கைது செய்து விட்டு மிகுதி படகுகளை விரட்டித்தான் விடுகின்றார்கள். இது இவ்வாறு இருக்கையில் இந்தியாவிலிருந்து ஒரு அப்பட்டமான பொய்யை பரப்புகின்றார்கள்.
எங்கள் நாட்டுக்குள்ளே வந்து எங்கள் வளங்களையும், வாழ்வாதாரத்தையும் கொள்ளை அடித்து செல்கின்றது இந்திய இழுவைப் படகுகள். கொள்ளையடித்து சென்றுவிட்டு, கடற்படை உங்களை விரட்டியடிக்கும் பொழுது எங்களுடைய கடற்படை கொள்ளை அடிக்கிறதாக பொய்யான தகவல்களை சொல்கின்றவர்கள். எமது வளங்களை கொள்ளையடிக்கின்ற நீங்கள் கொள்ளையர்களா? அல்லது விரட்டியடிக்கின்ற நாங்கள் கொள்ளையர்களா? என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.
வரலாற்றில் இதுவரைக்கும் எமது மீனவர்கள் எல்லையை தாண்டி போய் இதுவரைக்கும் எந்த ஒரு கெடுதலான செயல்களையும் செய்யவில்லை. சிறிய நாடு இலங்கை என்ற வகையில் வாய்க்கு வந்தது போல் சில குற்றச்சாட்டுகளை நீங்கள் முன்வைக்கின்றீர்கள்.
உங்களுக்குத் துணிவிருந்தால் உங்களுக்கு அயலில் உள்ள சிறிய நாடான பாகிஸ்தானுக்கு அண்டிய பகுதியில் அல்லது அந்த நாட்டு எல்லைக்குள் சென்று மீன்பிடித்து பாருங்கள். அங்கே சவால் விட முடியாமல், சீனாவுடன் சவால் விட முடியாமல், பல வருடங்கள் போரினாலும், பொருளாதாரத்தாலும் பாதிக்கப்பட்ட கீழ் நிலையில் இருக்கின்ற எமது இலங்கையை நீங்கள் பரிகாசம் செய்கின்றது போல சில விடயங்களை பேசிக் கொண்டிருக்கின்றீர்கள்.
சமீபத்தில் ஜெய்சங்கர் அவர்கள் இலங்கை – இந்திய மீனவர்களிடத்தில் ஒரு பேச்சு வார்த்தையை நடாத்தி நிரந்தர தீர்வு ஒன்றினை எட்ட வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கின்றார். அதற்கு அமைவாக அண்ணாமலையும் அவருடன் இணைந்து செயல்படுகின்றமையை எண்ணி சந்தோசப்பணுவதுடன் அதனை வரவேற்கத்தக்க விடயமாகவும் கருதுகின்றோம்.
இந்தியாவானது 2016ஆம் எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் பேசும் அதனைப் பேசினால் இந்த இழுவைமடி தொழிலுக்கு பங்கம் வரும் அல்லது அதனை நிறுத்துவதற்கு வாய்ப்பு இருக்கும் என்ற சந்தேகத்தை கொண்ட சில இழுவைமடி உரிமையாளர்கள் அல்லது தொழிலாளர்கள் இந்த பேச்சுவார்த்தையை முறியடிப்பதற்கு அல்லது அதை இல்லாது ஒழிப்பதற்கு ரகசியமான ஒரு சதித்திட்டத்தை வகுக்கின்றார்களோ என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்படுகின்றது.
எனவே இப்படியான பொய்யான கருத்துக்களை கூறிக்கொண்டு இந்த பேச்சுவார்த்தையை முறிக்க வேண்டாம். இதனைத் தொடர்வதற்கு அனைவரும் அனுசரணையாக இருக்க வேண்டும்.
இவற்றை எல்லாம் விட்டுவிட்டு நீங்கள் உண்மையான மன சுத்தியுடன் இறங்கி இந்த பேச்சுவார்த்தைக்கு வாருங்கள். இந்த பேச்சுவார்த்தையூடாக இலங்கை இந்திய மீனவர்களுடைய பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்திலே அனைவரையும் கேட்டு இருக்கின்றேன் – என்றார்.