(படங்கள் இணைப்பு)
கூட்டத்தில் தமது கருத்துக்களை வெளியிடுவதற்கு கூட அனுமதிக்கப்படவில்லை என்பதோடு, பல சிங்கள ஊடகவியலாளர்களுக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்பட்டதாக தமிழ் ஊடகவிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சிங்கள செய்தியாளர்கள் தமது கோரிக்கைகளை அடங்கிய மனுவையும் அந்த கூட்ட அரங்கிலே ஜனாதிபதியிடம் கையளிக்க அனுமதிக்கப்பட்டனர். எனினும், தமிழ் ஊடகவியலாளர்கள் நுழைவாயில் அருகே தடுக்கப்பட்டனர். தமிழ் ஊடகவியலாளர்களின் கோரிக்கை மனுவை அதிகாரிகள் பறித்துக்கொண்டமையால் அங்கு ஒரு முறுகல் நிலையும் ஏற்பட்டிருந்தது.
வடக்கு, கிழக்கு ஊடகவியலாளர்களால் ஜனாதிபதிக்கு எழுதப்பட்டிருந்த கடிதத்தில் படுகொலை செய்யப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைக்க ஒரு விசேட பொறுப்புக்கூறல் வழிமுறையை ஏற்படுத்த வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
”இலங்கையில் இரண்டு தசாப்தங்களாக அந்த ஊடகவியலாளர்களுக்கு கிடைக்கத் தவறிய நீதியை நிறைவேற்ற வேண்டுமெனின், சர்வதேச கண்காணிப்புடனான நீதிமன்ற அதிகாரங்களை உள்ளடக்கிய ஒரு விசேட நீதிச் சபையை நிறுவுவது பொருத்தமானது என நாங்கள் நம்புகிறோம்.” என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பாதுகாப்பு என்ற போர்வையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு ஊடகவியலாளர்கள் தடுக்கப்பட்டது ‘அப்பட்டமான புறக்கணிப்பு’ என அவர்கள் கூறுகின்றனர். படுகொலை செய்யப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியை மாத்திரமே அவர்கள் கோரியிருந்தனர்.
இலங்கையில் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர், கடத்தப்பட்டுள்ளனர் அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் போன்ற தகவல்களை ஜனாதிபதி அறிவார் என? கையளிக்கப்படவிருந்த கடித்தத்தில் கூறப்பட்டிருந்தது.
“2004ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை படுகொலை செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் பட்டியல் 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மனித உரிமைகள் தினத்தன்று ஊடகவியலாளர் மன்றத்தினால் நல்லாட்சியின் பிரதமரான உங்களிடம் கையளிக்கப்பட்டது. அதில் 44 ஊடகவியலாளர்களின் விபரங்கள் இடம்பெற்றுள்ளதாக சபைக்கு அறிவித்தீர்கள்”.
இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் (JDS) அமைப்பு தொகுத்து வெளியிட்ட அந்த அறிக்கையில் பெரும்பாலாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள். படுகொலை செய்யப்பட்ட தமது சகாக்களுக்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதி கிடைக்காமல் ஊடகச் சுதந்திரத்தை உறுதி செய்ய முடியாது என தமிழ் ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் வட மாகாணத்திற்கு விஜயம் செய்த போது உள்ளூர் தமிழ் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பிற்கு அனுமதிக்கப்படவில்லை. அனைத்து தகவல்களும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் மூலம் அறிக்கையாக அளிக்கப்பட்டது. இவ்வாறான செயற்பாடுகள் மூலம் தாங்கள் புறக்கணிக்கப்பட்டு அவமானப்படுத்த படுவதாக தமிழ் ஊடகவியாளர்கள் கூறுகின்றனர்.
வடக்கில் நடந்த புறக்கணிப்புகளை அடுத்து கொழும்பிற்கு அழைக்கப்பட்டு அவமானப்படுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
எனினும், ஜனாதிபதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் கையளித்த தங்களின் கோரிக்கைகளுக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னர் அவர் பதிலளிக்க வேண்டுமென அவர்கள் கோரியுள்ளனர்.
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள, 15 ஆகஸ்ட் 2024. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்ரமசிங்க அதற்கான கட்டுப்பணத்தை ஏற்கனவே செலுத்தியுள்ளார்.
தேர்தலை இலக்காகக் கொண்டே அவசரமாக ஊடகவியலாளர்களுடன் சந்திப்பிற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக, ஜனாதிபதிக்கான கோரிக்கை கடிதத்தில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் கூறியுள்ளனர்.
”கடந்த வாரம் மற்றும் மே மாத இறுதியில் நீங்கள் வடக்கிற்கு விஜயம் செய்த இரு சந்தர்ப்பங்களிலும் பிரதேச ஊடகவியலாளர்கள் செய்தி அறிக்கையிடுவதை தடை செய்த அரசாங்கத்தின் தலைவர் என்ற வகையில், எங்களுடனான சந்திப்பு தேர்தல் பிரச்சாரத்தை இலக்காகக் கொண்டது என நம்புகின்றோம்”.
கொழும்பில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட முழு கடிதமும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் குறித்த JDS பட்டியலும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.