விட்டுக்கொடுப்பதில் தேர்ச்சி பெற்ற தமக்கு அமைச்சுப் பதவிகளைத் துறப்பது பெரிய விடயமல்ல என தெரிவித்த சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நான்கு அமைச்சுகளின் பணிகளை சிறப்பாக செய்திருந்தேன் என்றார்.
சுற்றுலா சபை ஊழியர்களிடம் இன்று வெள்ளிக்கிழமை (09) விடைபெறுவதற்கு முன்னர் உரையாற்றிய ஹரின் பெர்னாண்டோ, உயர் நீதிமன்றம் இன்று காலை வழங்கிய உத்தரவுக்கு தலை வணங்குவதாகவுமு், இவ்வாறு நடக்கலாம் என்று தெரிந்தே ஜனாதிபதியுடன் இணைந்து கொண்டதாக தெரிவித்தார்.
அமைச்சர் பதவியை நீக்கினாலும் இந்த நாட்டின் குடியுரிமையை நீக்க முடியாது என தெரிவித்த அவர், அமைச்சராக இருந்த இரண்டு வருடங்களில் நேர்மையாக செயற்பட்டதாக குறிப்பிட்டார்.
ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்ட பதவிகளை சுற்றுலா சபையின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் விட்டுச் செல்ல வேண்டிய அவசியமில்லை எனவும், மேற்கொள்ளப்பட்ட பணிகளை எதிர்காலத்தில் முன்னெடுக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.