மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் மோதல் நிலைமையைக் கருத்திற் கொண்டு, இலங்கையர் உட்பட இஸ்ரேலில் தொழில்புரியும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்த இஸ்ரேல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தற்போதைய சூழ்நிலையில் ஏதேனும் தாக்குதல்களால் ஏற்படக்கூடிய அவசரநிலை தொடர்பில், அங்குள்ள புலம்பெயர் தொழிலாளர் தொடர்பு கொள்வதற்கு வசதியாக இஸ்ரேலிய அதிகாரிகள் வழிகாட்டல்களையும் தொலைபேசி எண்களையும் அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேலின் வெளிநாட்டு தொழிலாளர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
லெபனானிலிருந்து வடக்கு இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ‘சந்தேகத்திற்குரிய வான்வழி இலக்கை’ இஸ்ரேலிய இராணுவத்தின் வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் நேற்று தெரிவித்தன.
லெபனான், ஈரான் ஆகிய நாடுகளின் தாக்குதல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இலங்கை, துருக்கி, ஜப்பான், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள்,இஸ்ரேலிலுள்ள தமது நாட்டு மக்களுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளன.