பொருளாதாரத்திற்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில் நாம் பெற்றுள்ள கடன்களை திருப்பி செலுத்த இந்தியா அளித்துள்ள சலுகைகளுக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம் என்று மாலைதீவு ஜனாதிபதி மொஹம்மட் முய்சு குறிப்பிட்டுள்ளார்.
மாலைதீவின் சுதந்திர தின வைபவத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்ட ஜனாதிபதி முய்சு, பிரித்தானியாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மேற்கொள்ளவென பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் இந்தியாவுடனும் அத்தகைய உடன்படிக்கையொன்றை கைசார்த்திட முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளிப்படுத்தியுள்ளார்.
இவ்வைபவத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், எமது நாடு பெற்றுள்ள கடனைத் திருப்பிச் செலுத்துவதை எளிதாக்குவதற்கு இந்தியா ஆதரவளித்துள்ளது. அதன் ஊடாக எமது நாட்டின் பொருளாதார இறையாண்மையை உறுதிப்படுத்த முடிந்துள்ளது. இதனையிட்டு நாம் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். இந்தியாவைப் போன்று சீனாவும் எமக்கு ஆதரவு நல்கியுள்ளது. அவர்களுக்கும் நாம் நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.
மாலைதீவில் டொலருக்கு பற்றாக்குறை நிலவுகிறது. அதனைப் போக்கவென நாணய மாற்று ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்துகின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மாலைதீவை தளமாகக் கொண்ட ‘த எடிசன்’, கடந்த வருட இறுதியில் 6.2 பில்லியன் ரூபியாவை இந்தியாவுக்கு மாலைதீவு கடனாக செலுத்த வேண்டியிருந்ததாக சுட்டிக்காட்டியுள்ளது.