வெளிநாடுகளில் வாழுகின்ற சுமார் 25 இலட்சம் இலங்கையர்களின் கடவுச்சீட்டை போலியாக அச்சடித்து அவர்களின் வாக்குகளை சூறையாடும் பாரிய திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாக “Voice Of Sri Lanka” எனும் இணையதளத்தில் செய்தியொன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல்கள் ஆணைக்குழு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் ஆகியன இணைந்து இந்த மோசடி வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் அந்தச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களின் வாக்குகளில் மோசடி செய்யும் பாரிய திட்டம் ஒன்று தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது” என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் இந்த செய்தியின் உண்மைத்தன்மை குறித்து Factseeker ஆராய்ந்து பார்த்தது. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவிடம் factseeker வினவியபோது, நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பற்ற சூழல் காரணமாக வாக்காளர்களுக்கு வேறொரு இடத்தில் இருந்து வாக்களிக்க வாய்ப்பு இருந்ததாகவும் அது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட முறையல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
அந்தச் சட்டத்தின்படி, உயிருக்கு அச்சுறுத்தல் அல்லது அச்சம் உள்ள எந்தவொரு வாக்காளரும் தனது வாக்களிப்பு நிலையத்தை தவிர வேறு இடத்தில் வாக்களிக்கக் கோரலாம். அவர்கள் கோரும் வாக்களிப்பு நிலையத்தை வழங்க வேண்டும் என்ற விதி எதுவும் இல்லை எனவும், பாதுகாப்பான வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவது தேர்தல்கள் ஆணையாளரின் பொறுப்பாகும் எனவும் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் வாழும் சுமார் 25 இலட்சம் இலங்கையர்களின் கடவுச்சீட்டை போலியாக அச்சடித்து அவர்களின் வாக்குகளை சூறையாடும் பாரிய திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாக கூறப்படும் செய்தி முற்றிலும் பொய்யானது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்ததுடன், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கான வாக்களிப்பு முறைமை இதுவரையில் தயாரிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.