நாடளாவிய ரீதியில் 72 சுகாதார தொழிற்சங்கங்களின் வைத்தியசாலை பணியாளர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக தடைப்படும் வைத்தியசாலைகளின் நடவடிக்கைகள் தடையின்றி முன்னெடுப்பதற்கு தேவையான படையினரை பணியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பணிப்புரை வழங்கியுள்ளார்.
அதன்படி, தற்போது மேற்கு, கிழக்கு, மத்திய மற்றும் வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிகளின் மேற்பார்வையில் கொழும்பு மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலைகள், களுபோவில, கராப்பிட்டிய, மஹாமோதர, பேராதனை, அனுராதபுரம் மற்றும் குருநாகல் போதனா வைத்தியசாலைகள், மாத்தறை, பலாங்கொடை, ஹேலியகொட, நாவலப்பிட்டி, பதுளை, கம்பளை,மீரிகம,ஹோமாகம மற்றும் கேகாலை உட்பட 26 வைத்தியசாலைகளின் அன்றாட நடவடிக்கைகள் தடையின்றி தொடர்வதற்கு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது அந்த மருத்துவமனைகளின் தேவைக்கு ஏற்ப சுமார் 700 இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளதுடன் அவசரநிலை ஏற்பட்டால் மேலதிக படையினரை அனுப்புவதற்கு தயார்படுத்துமாறும் பொதுமக்களின் சுகாதார தேவைகளை தடையின்றி வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இராணுவத் தளபதியினால் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதிகள் மேலும் அறிவுறுத்தப்படுள்ளனர்.