புத்தளம், மதுரங்குளி நகரில் இன்று காலை இடம்பெற்ற பாரிய விபத்தில் கொள்கலன் லொறியின் சாரதி படுகாயமடைந்ததுடன், பொதுச் சொத்துக்களுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
மதுரங்குளி நகரின் பிரதான பாடசாலையொன்றுக்கு முன்பாக பயணித்த கொள்கலன் லொறி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்றமையாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த கொள்கலன் லொறி, வீதியோரத்தில் இருந்த பேருந்து தரிப்பிடத்தை மோதித் தள்ளியதில் அது முழுமையாகச் சேதமடைந்து தரைமட்டமானது. அதனைத் தொடர்ந்து வீதியின் மறுபக்கத்துக்கு லொறி பாய்ந்த வேளையில், புத்தளம் திசையில் இருந்து வந்த விமானப்படைக்குச் சொந்தமான டிபென்டர் ரக வாகனமும், மற்றுமொரு லொறியும் குறித்த கொள்கலன் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகின.
இவ்விபத்தில் பலத்த காயமடைந்த கொள்கலன் லொறியின் சாரதி, உடனடியாக மீட்கப்பட்டு புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டிபென்டர் வாகனத்தில் பயணித்த விமானப்படையினர் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
விபத்து இடம்பெற்ற தருணத்தில் பாடசாலை மாணவர்கள் அல்லது பயணிகள் எவரும் பேருந்து தரிப்பிடத்தில் இல்லாத காரணத்தால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
விபத்தால் வாகனங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










