மறைந்த தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தமக்கு உடல் ரீதியான தொல்லை அளித்ததாக பெண் ஒருவர் கூறியுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான வாக்குமூலங்கள் அடங்கிய எப்ஸ்டீன் வழக்கு ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.
அந்தப் பெண், எப்ஸ்டீன் மூலமாக ட்ரம்ப் தமக்கு அறிமுகமானதாகவும், அதன் பின்னர் அவர் தமக்கு பாலியல் ரீதியான தொல்லை அளித்ததாகவும் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. அதிகாரிகளிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
2019ஆம் ஆண்டு எப்.பி.ஐ. அதிகாரிகள் அந்தப் பெண்ணிடம் பல கட்டங்களாக நடத்திய விசாரணைகளின் விவரங்களே தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதில், தமக்கு 13 முதல் 15 வயதுக்குள் இருந்தபோது எப்ஸ்டீன் மற்றும்ட்ரம்ப் ஆகியோரால் தாம் பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், எப்ஸ்டீன் தன்னை நியூ ஜெர்சி மாநிலத்திற்கு அழைத்துச் சென்று ட்ரம்ப்புக்கு அறிமுகப்படுத்தியதாகவும், அப்போது ஏற்பட்ட பாலியல் அத்துமீறலைத் தடுக்க முயன்றபோது தாம் அவரை கடித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக பின்னர் தமக்கு மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதற்கிடையில், எப்ஸ்டீன் விசாரணை தொடர்பான ட்ரம்ப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தகவல்களை அவரது நிர்வாகம் மறைத்து வருகிறது என அமெரிக்க ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.










