வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி- கொழும்பு பிரதான வீதியில் மாவடிச்சேனை பிரதேசத்திலுள்ள மின் சாதனங்கள் விற்பனை செய்யும் சகோதரர் அஷ்ரப் என்பவருக்குச் சொந்தமான கடையிலேயே திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
உடனடியாக தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் தண்ணீர் பவுஸர், மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு வாகனம், கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசர சேவை மற்றும் பொதுமக்களும் இணைந்து மேற்கொண்டிருந்தனர்.
மின்னொழுக்கினால் தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மின்னுபகரணங்கள் தீயில் கருகி சாம்பலாகியுள்ளதுடன், கடையின் கீழ்ப்பகுதி முற்றாக சேதமடைந்து, மேல் தளமும் பாரிய சேதங்களுக்குள்ளாகியுள்ளது.
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை எல்லைக்குள் அமைந்துள்ள குறிப்பிட்ட கடையில் ஏற்பட்டுள்ள தீயினைக்கட்டுப்படுத்த உதவியை நாடி பிரதேச சபை அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட போதும் தொடர்பு கிடைக்காத நிலையில், தனது நிர்வாக எல்லைக்கு அப்பாற்பட்ட பிரதேசத்தில் ஏற்பட்ட தீயினை அணைக்க உடனடியாக தண்ணீர் பவுஸரை அனுப்பி நடவடிக்கை மேற்கொண்ட ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எஸ்.ஏ.அமீர் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்புப் பிரிவினர் களத்தில் நின்று செயற்பட்ட வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திரு லசந்த பண்டார, போக்குவரத்து பொலிஸார், களத்தில் செயற்பட்ட கல்குடா அனர்த்த சேவைப் பிரிவிருக்கும் பொதுமக்களுக்கும் நன்றிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒவ்வொரு தீ விபத்துச் சம்வங்கள் இடம்பெறுகின்ற போதும் தீயணைப்பு வாகனத்தின் தேவை உணரப்படுவதும் அது தொடர்பில் பேசுவதுடன் தீயணைப்பு வாகன விவகாரம் முடிந்து விடுகின்றது.




