இந்த நாட்டில் அதிகளவான பெண்களின் செயற்பாடுகளே நாட்டின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்பிவருவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்ரீனா முரளிரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களின் உற்பத்திகளுக்கான சந்தைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் வழிகாட்டுதலில் ஐக்கிய நாடுகள் பெண்கள் அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக ஜப்பானிய நிதி உதவியில் ஷெரிஷலிஸ் நிறுவகத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்கீழ் பெண்களுக்கான தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் பெண் முயற்சியாளர்களின் பண்முகத்தன்மை கண்காட்சியும் இன்று மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் பிரணவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்ரீனா முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் பெண் அபிவிருத்தி திட்டத்தின் இணைப்பாளர்களான மிக்ஷேல், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம், கோறளைப்பற்று வடக்கு வாகரை, வாழைச்சேனை பிரதேச செயலாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
பெண்களின் பொருளாதாரத்தினை வலுப்படுத்தல் மற்றும் முயற்சியான்மையினை மேம்படுத்தல் திட்டத்தின் முன்னெடுக்கப்பட்டுவந்த பல்வேறு பயிற்சி திட்டங்களை நிறைவு செய்தவர்களுகான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் பெண் முயற்சியாளர்களுக்கான தொழில் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.
வாகரை, வாழைச்சேனை, மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவுகளில் இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நிலையில் இந்த திட்டங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டுவரும் உற்பத்திகள் கொண்ட கண்காட்சி கூடங்களும் இதன்போது திறந்துவைக்கப்பட்டன.
நூற்றுக்கணக்கான உற்பத்தியாளர்களின் கண்காட்சி கூடங்களும் இதன்போது திறந்துவைக்கப்பட்டன.










