தம்மை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தி கட்சியின் மத்திய குழு எடுத்த முடிவுக்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவு உட்படக் கட்டளைகளை வழங்குமாறு கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் எஸ்.சிவமோகன் தாக்கல் செய்த வழக்கின் மீது இடைக்காலக் கட்டளை தொடர்பான தனது முடிவை யாழ். மாவட்ட நீதிமன்றம் நாளைமறுதினம் வியாழக்கிழமை வழங்கும்.
இந்த வழக்கின் நான்காவது எதிராளியான சிறீதரன் மன்றில் தாக்கல் செய்திருந்த பதில் மனுவுக்கு எதிராகவும் மிகக் காட்டமான – சூடான வாதத்தை இன்று முன்வைத்தார் மற்றைய மூன்று எதிராளிகளின் சட்டத்தரணியான எம்.ஏ.சுமந்திரன்.
இன்று காலை இந்த வழக்கு யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி சதீஸ்கரன் முன்னிலையில் எடுக்கப்பட்டபோது அது பற்றிய பூர்வாங்க விசாரணைகள் இடம்பெற்றன.
வழக்காளி தரப்பில் சட்டத்தரணி குருபரனும், வழக்கின் முதல் மூன்று எதிராளிகளான கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், கட்சியின் பதில் பொதுச்செயலாளராக இருந்த வைத்தியர் ப.சத்தியலிங்கம், கட்சியின் நிர்வாகச் செயலாளர் எக்ஸ்.குலநாயகம் ஆகியோர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணி கே.சயந்தன் ஆகியோரும் முன்னிலையாகி இருந்தனர்.
நான்காவது எதிராளியான சிவஞானம் சிறீதரன் சார்பில் வழக்கின் ஆரம்பத்தில் சட்டத்தரணி பிரசன்னமாகாத நிலையில் அவருக்காக நீதிமன்றம் காத்திருக்க வேண்டி இருந்தது. பின்னர் சிறீதரனின் சட்டத்தரணியும் இணைந்து கொண்டார்.
தாமும், தமது சக சட்டத்தரணியான கேசவன் சயந்தனும் இந்த வழக்கில் எதிராளிகள் சார்பில் முன்னிலையாகாமல் தவிர்க்கச் செய்வதற்காக, இந்த வழக்கின் பிராதில் பல இடங்களில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களான தங்கள் இருவரின் பெயரும் வலிந்து நுழைக்கப்பட்டுள்ளன என ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் ஆரம்பத்தில் சுட்டிக்காட்டிப் பதிவுகளைச் செய்தார்.
ஆயினும் வழக்காளியின் சட்டத்தரணிகளாகத் தங்களின் பிரசன்னம் இந்த வழக்கின் போக்கை பாதிக்காது என்பதை அவர்கள் மன்றில் தெளிவுபடுத்தினர்.
“இப்போது உள்ளூராட்சி சபைத் தேர்தல் அழைக்கப்பட்டு இருக்கின்றது. அதில் போட்டியிடக் கூடிய புதிய சூழ்நிலை வந்திருப்பதால் இந்த விடயம் குறித்து தீர்மானிக்க வேண்டிய ஒரு தேவை புதிதாக வந்திருக்கிறது.” – என்று வழக்காளி தரப்புச் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
அதை ஆட்சேபித்தார் எதிராளி தரப்புச் சட்டத்தரணி சுமந்திரன். “கட்சியில் மாவட்டக் கிளைத் தலைவராக இருந்து கொண்டு பொதுத் தேர்தலில் மாவட்டத்தில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர்களைப் பகிரங்க வெளியில் வேண்டுமென்றே மோசமாக விமர்சித்து குற்றம் இழைத்த வழக்காளிக்கு இன்னொரு தேர்தலில் வாய்ப்பு அளிக்க கட்சி இடமளிக்க மாட்டாது. இப்போது வந்திருக்கின்ற தேர்தலும் கூட, கட்சியில் இடமளிக்காமல் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து மனுதாரரை இடைநிறுத்த வேண்டிய தேவையை மீண்டும் ஏற்படுத்தி இருக்கின்றது. ஆகவே, அது புதிய விடயம் அல்ல. அதைப் புதிய விடயமாகக் காட்டி, அவரைக் கட்சியிலிருந்து இடைநிறுத்தியமைக்கு எதிராக இடைக்காலத் தடை விதிப்பதற்குப் புதிய தேவைப்பாடு எழுந்திருப்பதாகக் காட்டுவது அர்த்தமற்றது. அடுத்தது, இத்தகைய நடத்தை உடையவருக்கு கட்சி எந்தக் கட்டத்திலும் வேட்பாளராக இடமளிக்கவே மாட்டாது. அப்படி அவருக்கு வேட்பாளராக இடமளிக்கும்படி எந்த நீதிமன்றமும் கூட ஒரு கட்சியைக் கட்டாயப்படுத்த முடியாது. ஆகவே, தேர்தல் வந்திருக்கின்றது, அது புதிய விடயம் என்று காரணத்தைக் காட்டி, அந்தப் புதுச் சூழலின் அடிப்படையில் தடையை நீக்குவதற்கான ஒரு கோரிக்கையை வழக்காளி வைப்பதற்கு அர்த்தமே இல்லை.” – என்று எதிராளி தரப்புச் சட்டத்தரணி சுமந்திரன் வாதிட்டார்.
ஏற்கனவே இத்தகைய மனு ஒன்றை இதே நீதிமன்றத்தில் வழக்காளி தாக்கல் செய்தார். அதனை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. வழக்காளியைக் கட்சியிலிருந்து இடைநிறுத்தும் முடிவுக்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவு ஒன்று வழங்குவதற்கு இந்த வழக்கில் முகத் தோற்றத்தளவிலேயே காரணங்கள் ஏதும் இல்லை என்று இந்த நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு வழங்கியிருக்கின்றமையை சுமந்திரன் மன்றின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.
கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த வைத்தியர் ப.சத்தியலிங்கமும் தாமும் (சுமந்திரனும்) சேர்ந்து கபட நடவடிக்கைகளை முன்னெடுத்து, கட்சியின் மாநாடு நடைபெறாமல் – பொதுக்குழுவைக் கூட்ட முடியாமல் – தடை உத்தரவை திருகோணமலை நீதிமன்றம் மூலம் கபடமாகப் பெற்று, விடயங்களை முன்னெடுக்கின்றனர் என்று வழக்காளி தமது மனுவில் தெரிவித்திருக்கின்றமையை முதல் மூன்று எதிராளிகளின் சட்டத்தரணி சுமந்திரன் இன்று நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
வழக்காளியின் பிராதில் கூறப்பட்டுள்ள அந்தக் கருத்தை – விடயங்களை அப்படியே தான் ஏற்கின்றார் என நான்காவது எதிராளியான சிறீதரன் தன்னுடைய பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.
ஆனால், திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் கட்சியின் பொதுக்குழு கூடுவதற்கு எதிராக வழங்கிய இடைக்காலக் கட்டளை அந்த வழக்கின் எதிராளிகளில் ஒருவரான சிறீதரனின் இணக்கத்துடன்தான் வழங்கப்படுகின்றது என்பது அந்தக் கட்டளையிலேயே தெளிவாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. அப்படி அந்த நீதிமன்றத்துடன் இணங்கி, அந்த இடைக்காலக் கட்டளைக்குச் சம்மதம் தெரிவிக்கின்றார் என ஒப்புக்கொண்ட சிறீதரன், இப்போது இந்த வழக்கில் வந்து, அந்தக் கட்டளையை ஏற்படுத்தியதன் மூலம் சுமந்திரன், சத்தியலிங்கம் ஆகியோர் கபடமாக நடந்து கொள்கின்றனர் என்று கூறுவது முற்றிலும் தவறானதும், முரணானதும், உண்மைக்கு மாறானதும் ஆகும் என்று எதிராளி தரப்பு சட்டத்தரணி சுமந்திரன் சுட்டிக்காட்டியமையை யாழ். நீதிமன்றம் இன்று பதிவு செய்து கொண்டுள்ளது.
இடைக்காலக் கட்டளை தொடர்பான உத்தரவு நாளைமறுதினம் வியாழக்கிழமை யாழ். நீதிமன்றத்தில் வழங்கப்பட இருக்கின்றது.