சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய முடியுமா என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எழுப்பிய கேள்விக்கு, ஒரு வாரத்துக்குள் பதிலளிக்கப்படும் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது.
இதன்போது நிலையியல் கட்டளையின் 27/2 இன் கீழ் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிறீதரன் எம்.பி. விசேட அறிக்கையொன்றை விடுத்து கேள்விகளை எழுப்பி இருந்தார்.
“தமிழ் இளைஞர்கள் பலர் இலங்கை சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக அரசியல் கைதிகளாக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் குடும்பங்கள் கண்ணீருடனும், கவலையுடனும் அவர்களின் வரவுக்காக காத்திருக்கின்றன.” – என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது எத்தனை தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர்?
எந்தெந்தச் சிறைச்சாலைகளில் தடுத்துவைத்துள்ளனர்?
அவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள்?
மனிதாபிமான அடிப்படையில் அல்லது ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய முடியுமா?” – என்று சிறீதரன் எம்.பி. கேள்விகளை எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார,
“இது மிக முக்கிய பிரச்சினையாகும். எனவே, இன்றைய தினத்திலேயே பதிலளிக்க முயற்சித்தேன். எனினும், பாதீட்டில் நீதி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் நாளை நடைபெறவுள்ளதால் அமைச்சு அதிகாரிகள் அனைவரும் வேலைப்பளுவில் உள்ளனர். எனக்கு ஒரு வாரம் தாருங்கள். முழுமையான பதில்களை நிச்சயம் வழங்குவேன்.” – என்று குறிப்பிட்டார்.