உந்துருளியில் சட்டவிரோத கசிப்பினை விற்பனைக்கு கொண்டு சென்ற இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று (28.02.2025) மாலை இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் விற்கப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹேரத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து நேற்றையதினம் பொலிஸ் சார்ஜன்களான (36417) பிரேமச்சந்திர , (69567) ரணசிங்க, (66171) ஜானக்க, பொலிஸ் கொஸ்தாபிள்களான (72485) ஜெயசூர்ய, (105152) கவிராஜ், (91451) குமார, (87977) சில்வா, (36841) குமாரசிங்க, (99801) புத்திக்க ஆகிய பொலிஸ் குழுவினரின் திடீர் சோதனை நடவடிக்கையின் போது புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உந்துருளியை மறித்து சோதனை செய்த போது 55 லீற்றர் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசுவமடு பகுதியை சேர்ந்த 21, 26 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் விசாரணையின் பின்னர் இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட இருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


