வருடா வருடம் மன்னார் மாவட்டத்தில் பாடல் பெற்ற தலமான திருக்கேதீஸ்வரத்தில் இடம்பெறும் சிவராத்திரி நிகழ்வுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருவது வழமை.
இவ்வாறான நிலையில் ஆண்டு தோறும் சிவராத்திரி நிகழ்வுக்காக திருக்கேதீஸ்வர வளாகத்தில் கடைகள் மற்றும் தரிப்பிடங்கள் குத்தகை மூலம் வழங்கப்பட்டு வருகின்றது.
ஆனால் ஆண்டு தோரும் திருகேதீஸ்வர நிர்வாகம் வருமானத்தை நோக்காக கொண்டு தரிப்பிடங்களையும் கடைகளையும் அதிக விலைக்கு குத்தகைக்கு வழங்குவதனால் பொதுமக்கள் பல்வேறு விதமாக பாதிக்கப்படுவதாக விசனம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக உந்துருளி தரிப்பிட கட்டணங்கள் வழமையாக அதிகமாக காணப்படுகின்ற நிலையில் இம்முறை திருக்கேதீஸ்வர முன்னாயத்த கலந்துரையாடல் கூட்டத்தில் 100 ரூபாவாக உள்ள கட்டணத்தை 50 ஆக மாற்றுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் கோரிக்கை விடுத்த போதிலும் திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாக 100 ரூபாய் நிர்ணயித்து அதிக அளவு பணம் வசூலித்துள்ளது.
இவ்வாறே முச்சக்கர வண்டி, பேருந்து தரிப்பிட கட்டணங்களும் அதிகளவாக வசூலித்து மகக்ளை பாதிப்படைய வைக்கும் செயற்பாட்டில் திருக்கேதீஸ்வர நிர்வாகம் ஈடுபட்டு வருவதாக விசனம் தெரிவித்துள்ளனர்.
ஏனைய ஆன்மீக திருத்தலங்களில் இவ்வாறு தரிப்பிடங்களுக்கு கட்டணம் அறவிடப்படுவது இல்லை.
எனவே இவ்வாறான நிலையில் எதிர்வரும் காலங்களிலாவது ஒரு ஆன்மீக ஸ்தலமாக மக்கள் மீது சுமைகளை சுமத்தி வருமானத்தை இலக்காக கொள்ளாது பக்தர்களுக்காக சேவையாக அர்ப்பணிப்போடு செயற்படுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
