“வடக்கு, கிழக்கு மக்கள் பல அடிப்படைப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். இருப்பினும் வரவு – செலவுத் திட்டத்தில் அதற்கான தீர்வுகள் ஏதும் முன்வைக்கப்படவில்லை. எம் மக்களுக்கு முரண்பாடற்ற தீர்வு கிடைக்கும் வரையில் அரசின் வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதை தவிர வேறு எந்தத் தெரிவுகளும் எமக்குக் கிடையாது. போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்தும் தமிழர் பிரதேசங்களில் ஆக்கிரமிப்புக்கள் இன்றும் தொடர்கின்றன.” – இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் 7 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“சுதந்திரத்தின் பின்னரான 76 வருடங்களாக இந்த நாட்டை இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் மாத்திரமே ஆட்சி செய்தன. பெயர்கள் மாறுபட்டாலும் அந்த இரண்டு கட்சிகளே ஆட்சி செய்து வந்துள்ளன. இந்நிலையில் தற்போதைய அரசு பதவியேற்ற பின்னர் கடந்த 76 வருடங்களை காட்டிலும் மாறுபட்ட காலகட்டமாக தற்போதைய நிலை இருக்கின்றது.
இனப்பிரச்சினைகள் மற்றும் தமிழ்த் தேசிய வாதம் தொடர்பில் அவர்களின் கருத்துக்களை கேட்காவிட்டாலும் அவர்களின் கொள்கையை முன்னெடுப்பவர்களாக இருக்கின்றனர். ஆனால், தாம் ஆட்சிக்கு வந்தால் இனவாதத்தை முற்றாக இல்லாமல் செய்வதாகக் கூறினர். இனப்பிரச்சினைக்கான அடிப்படை காரணம் இனவாதமாகும். இதனை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும்.
காலம்காலமாக இனவாதத்தால் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் சிறந்த ஆரம்பத்தை அரசு முன்வைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வாக ஏதும் குறிப்பிடப்படவில்லை.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டவாறு வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என்றே நாங்கள் எதிர்பார்த்தோம். இந்த மாகாணங்களுக்காக விசேடமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. வடக்கில் வீதி அபிவிருத்திருக்காக 5000 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதாகக் கூறப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் 5 மாவட்டங்கள் உள்ளன. அதன்படி ஒரு மாவட்டத்திற்கு ஆயிரம் மில்லியன் ரூபாவே கிடைக்கும். அடிப்படை உட்கட்டமைப்புக்கு குறைந்தப்பட்சம் 1300 மில்லியன் ரூபாவாவது தேவையாகும். அதேபோன்று யாழ். நூலக அபிவிருத்திக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இது போதுமானதல்ல. அத்துடன் கச்சேரிக்கான மூலதனச் செலவை எடுத்துக்கொண்டால் யாழ்ப்பாணத்துக்கு 187 மில்லியன் ரூபாவும், மன்னாருக்கு 189 மில்லியன் ரூபாவும், வவுனியாவுக்கு 100 மில்லியன் ரூபாவும், முல்லைத்தீவுக்கு 126 மில்லியன் ரூபாவும், கிளிநொச்சிக்கு 179 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்படுகின்றது.
எனினும், அம்பாந்தோட்டைக்கு 500 மில்லியன் ரூபாவுக்கு அதிகமாகவும், மாத்தறைக்கு 400 மில்லியன் ரூபாவுக்கு அதிகமாகவும், கம்பஹாவுக்கு 500 மில்லியன் ரூபாவுக்கு அதிகமாகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. கேகாலை, இரத்தினபுரி, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும் அவ்வாறே அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், எமது மாவட்டங்களுக்கு 200 மில்லியன் ரூபாவுக்குக் குறைவாகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளன.
போரால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் இவை. இங்கே என்ன செய்தியைக் கூற விரும்புகின்றீர்கள். இந்த மாவட்டங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி கூறினாலும் அதற்கு மாற்றமான வகையிலேயே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, வரவு – செலவுத் திட்டத்தில் கல்விக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் கீழுள்ள கல்வி அமைச்சின் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுவதுடன், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 20 ஆயிரம் ரூபாவுக்கு மேல் கொடுப்பனவு வழங்கப்படுகின்றது.
ஏன் இவ்வாறு வேறுபட்ட வகையில் கொடுப்பனவு. இது கல்வியை இராணுவ மயமாக்கும் விடயம்தானே. கடந்த அரசின் இந்தக் கொள்கையை நாங்கள் கடுமையாக எதிர்த்தோம். போர் முடிவடைந்து 15 வருடங்கள் நிறைவடைந்தும் தற்போதும் அடக்குமுறையான செயற்பாடுகளே இருக்கின்றன.
கிழக்கு மாகாணத்தை எடுத்துக்கொண்டால் நிதி கேந்திரமாக மாற்றப்படும் என்று கூறப்பட்டு, அந்தப் பொறுப்பை இந்தியா ஏற்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் சர்வதேச ரீதியில் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தியா இதை ஏற்றுக்கொள்ளுமா? இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா அவற்றைப் பெற்றுக்கொள்ள விரும்புகின்றது.
ஆனால், நீங்கள் வேறு நிறுவனங்களுக்குக் கொடுக்க முயற்சிக்கின்றீர்கள். இந்நிலையில் இந்தியா கிழக்கில் அபிவிருத்திகளைச் செய்யுமா? இதில் பல சந்தேகங்கள் எழுகின்றன.
விவசாயத்துறை மற்றும் உணவுப் பாதுகாப்பு துறைகளை எடுத்துக்கொண்டால் வடக்கு மற்றும் கிழக்கில் வனப் பாதுகாப்பு திணைக்களம், உயர் பாதுகாப்பு வலயங்களாக பெரும்பாலான காணிகளைக் கைப்பற்றியுள்ளன. பொதுமக்கள் தமது விவசாய நிலங்களுக்குச் செல்வதற்காக நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது.
அந்த மக்கள் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். கிழக்கு மாகாணத்தில் மயிலத்தமடு போன்ற இடங்களில் தமிழர்களின் பால் பண்ணை தொழிலுக்கு எதிரான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. மயிலத்தமடு மேய்ச்சல் தரை பகுதிக்காக மக்கள் போராட்டங்களை நடத்துகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தி அரசு தெளிவான நிலைப்பாட்டை எடுக்காவிட்டால் முன்னைய அரசுகளின் வரவு – செலவுத் திட்டத்தை போன்றதாகிவிடும். இந்த அரசின் கொள்கை முன்னைய அரசுகளின் கொள்கை மற்றும் செயற்பாடுகளில் இருந்து மாறுபடாது. நாங்கள் கடந்த அரசுகளின் வரவு – செலவுத் திட்டங்களுக்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தோம்.
இவ்வாறான அடிப்படைப் பிரச்சினைகள் வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் முகம்கொடுக்கின்றனர். இந்த அரசின் ஊடாக பாரிய மாற்றம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எம் மக்கள் மத்தியில் இருந்தது. ஆனால், இந்த வரவு – செலவுத் திட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்குக்குத் தீர்வுகள் ஏதும் குறிப்பிடப்படவில்லை.
அரசானது எங்களுக்கு குழப்பமில்லாத தீர்வை வழங்கும் வரையில் வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு தெரிவுகள் கிடையாது.” – என்றார்.