இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் எதிர்வரும் 11ஆம் திகதி தைப்பூசத் திருநாளை முன்னிட்டு உலகப் பெருமஞ்சம் வீதியுலா நடைபெறவுள்ளது.
தைப்பூச தினத்தன்று ஆலய வழிபாடுகள் தொடர்பிலான முன்னாயத்த கூட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை இணுவில் அறிவாலய மண்டபத்தில் நடைபெற்றது.
அதன் போது, தைப்பூச தினத்தினை முன்னிட்டு ஆலய சூழலில் முன்னெடுக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் துறை சார்ந்தவர்களின் பங்களிப்புடன் ஆலயத்தினர் ஆராய்ந்தனர்.
அதில், ஆலய சூழலில் விற்கப்படும் இனிப்புப் பண்டங்கள் உள்ளிட்ட உணவு கையாளும் நிலையங்களின் சுகாதார நடைமுறைகளை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கண்காணித்தல், பக்தர்களின் நலன் கருதி பிரதேச சபையினரால் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல், வீதி போக்குவரத்து ஒழுங்குகளை கையாளுதல், தற்காலிக கடைகளுக்கான நடைமுறைகள், அவற்றுக்கான இட ஒதுக்கீடுகள் உள்ளிட்டவை தொடர்பில் கலந்துரையாடி முடிவுகள் எட்டப்பட்டன.
அதனைத் தொடர்ந்து ஆலயத்தினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,
தைப்பூச தினத்தன்று உலக பெருமஞ்ச வீதியுலா இடம்பெறவுள்ளது. நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருகை தரும் பெரும்பாலானவர்கள் மஞ்சத் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.
தைப்பூச தினத்தன்று காலை 5.30 மணிக்கு அபிஷேகங்கள் இடம்பெற்று விசேட பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகும். தொடர்ந்து காலை மருதனார்மடம் பல்லப்ப வைரவர் ஆலயத்தில் இருந்து பாற்குட பவனி ஆரம்பிக்கும். அதற்கான பற்றுச் சீட்டுகளை இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் பக்தர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
அதேவேளை பாற்குட பவனியில் கலந்து கொள்ளவுள்ள பக்தர்களின் நலன் கருதி ஆலயத்தினரால் பால் செம்பு உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வழங்கப்படும். தேவையானவர்கள் முன்னரே பதிவுகளை மேற்கொள்ளுங்கள்.
பாற்குட பவனியை தொடர்ந்து காவடி எடுத்தல் நிகழ்வு இடம்பெறும்
அத்துடன், ஆலயத்திற்கு சொந்தமான சங்குவேலியில் உள்ள வயலில் நெல் அறுவடை செய்து, அதனை எருது வண்டியில் ஆலயத்திற்கு பாரம்பரிய முறைப்படி எடுத்து வந்து, ஆலய முன்றலில் நெல் குத்தி, அரிசியாக்கி, அந்த அரிசியில் பொங்கல் நிகழ்வு இடம்பெறும்.
பொங்கல் நிகழ்வில் பக்தர்களும் கலந்து கொண்டு, ஆலய சூழலில் பொங்கல் வழிபாடுகளில் ஈடுபடலாம். பொங்கல் பொருட்களை எடுத்து வர சிரமம் எனில் ஆலயத்தில் பொங்கல் பொருட்களை பெற்றுக்கொள்ள கூடிய வசதிகளை செய்துள்ளோம். பொங்கல் பொருட்கள் தேவையானவர்களுக்கு முன்னரே பதிவுகளை மேற்கொள்ளுங்கள்.
பொங்கல் நிகழ்வுகள் நடைபெறும் வேளையில் ஆலய மணிமண்டபத்தில் கலை நிகழ்வுகள் இடம்பெறும்.
இவற்றினை தொடர்ந்து மாலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று, மாலை 6.30 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று ஆறுமுகசுவாமி வள்ளி தெய்வானை சமேதரராய் உலக பெருமஞ்சத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளிப்பார்.
திருமஞ்சத்தில் முருகப்பெருமான் வீதியுலா வரும் வேளை வீதியில் பாரம்பரிய கலை கலாச்சார நிகழ்வுகள் இடம்பெறும் என ஆலயத்தினர் தெரிவித்துள்ளனர்.