கிளிநொச்சி மாவட்டத்தின் 2025ம் ஆண்டுக்கான பிரமந்தனாறு சிறுபோகம் உப உணவு பயிர்ச்செய்கைக் குழுக்கூட்டம் இன்று(23) நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடல் பிரமந்தனாறு கிராம அலுவலர் அலுவலகத்தில் காலை 09.30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி பணிப்பாளரும் பதில் திட்டமிடல் பணிப்பாளருமான எஸ்.மோகனபவன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
பிரமந்தனாறுக்குளத்தின் அபிவிருத்தி பணிகள் எதிர்வரும் மே மாத இறுதிக்காலப் பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இக்குளத்தின் கீழான சிறு போக பயிற்செய்கையை துரிதப்படுத்தும் நோக்கில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.
நீர்ப்பாசனத் திணைக்களம், கமநல அபிவிருத்தி திணைக்களம், விவசாயத் திணைக்களம் (விரிவாக்கம்), விவசாயத் திணைக்களம் (ஆராய்ச்சி), விவசாயத் திணைக்களம் (விதைகள் மற்றும் நடுகைப்பொருட்கள்), கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம், விவசாய காப்புறுதி சபை ஆகிய திணைக்களங்களின்
திணைக்களத் தலைவர்கள் நடப்பாண்டுக்கான திட்டங்கள் மற்றும் பொதுவான அறிவுறுத்தல்களை உள்ளடக்கியதான கருத்துக்கள் இடம்பெற்றன.
தொடர்ந்து பயிர்ச் செய்கை காலப்பகுதி, நீர் விநியோகம், கால்நடை கட்டுப்பாடு, வாய்க்கால் துப்பரவு பணிகள், கால்நடை பராமரிக்க தவறின் அதற்கான தண்டப்பண அறவீடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு விவசாயிகளின் ஒப்புதலுடன் பயிர்ச் செய்கை அட்டவணை தயாரிக்கப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் பிரதி மாகாண நீர்பாசன பணிப்பாளர், மாவட்ட செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர், கண்டாவளை பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், பிரதி விவசாய பணிப்பாளர்(விரிவாக்கம்), பிரதி விவசாய பணிப்பாளர்(ஆராய்ச்சி), நீர்ப்பாசன பொறியியலாளர், நெல் ஆராய்ச்சி பிரிவின் பிரதிப் பணிப்பாளர், பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி, கமநல காப்புறுதி சபை உத்தியோகத்தர், கிராம அலுவலர், கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட துறைசார் உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதிகள், விவசாயிகள், பண்ணையாளர்கள் என பலரும் இதன் போது கலந்து கொண்டிருந்தனர்.