“இந்தியா சென்ற என்னைக் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைத்தில் தடுத்து நிறுத்தியமைக்குப் பின்னால் பெரும் சதியுள்ளது. அது தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரனிடம் விசாரணை நடாத்த வேண்டும்.” – என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமர்வின்போதே இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கனடாவில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்புடன் கலந்துரையாடவே நான் சென்னை செல்ல இருந்ததாகவும், அதனாலேயே விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுமந்திரன் தனியார் செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேற்குறித்த விடயம் தொடர்பில் சுமந்திரனை விசாரித்தால் இது தொடர்பான செய்திகள் எந்த ஊடகங்களில் வந்தது என்பதை அறியமுடியும்.
ஆனால், சுமந்திரனை நான் சென்னையில் கண்டபோதும் அவர் என்னிடம் இது பற்றி எதுவும் கேட்கவில்லை.
எனவே, இவ்வாறு விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது எனக்கு எதிராக நடத்தப்பட்ட திட்டமிட்ட சதியாகவே நான் கருதுகின்றேன்.
நீங்கள் சுமந்திரனை விசாரித்தால் இதற்குரிய உண்மையைக் கண்டறிய முடியும்.” – என்றார்.