கடந்த 17.01.2025 ஆம் ஆண்டு கௌரவ வடக்கு மாகாண ஆளுநருடன் எமது சந்திப்பு இடம்பெற்றது. தூர சேவை பேருந்துகள் புதிதாக அமைக்கப்பட்ட பேரூந்து நிலையத்தில் கடமையாற்றுமாறும் கோரப்பட்டது. அதற்கு நாங்கள் எமது இலங்கை போக்குவரத்து சபையின் தலைவருடைய ஆலோசனைக்கு அமைவாக தான் செயற்படுவோம் என தெரிவித்திருந்தோம். இலங்கை போக்குவரத்து சபையினுடைய தலைவரினுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவாறு அனைத்து மாவட்டங்களுக்குமான இணைந்த நேர அட்டவணையை தயாரித்து எமது தற்போதைய பேருந்து நிலையத்திலிருந்து சேவையை ஆரம்பித்து தூர பேருந்து சேவை நிலையத்திற்குச் சென்று பின்னர் சேவையினை தொடருமாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கடிதம் ஆளுநர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனை எமது சபை தலைவரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
எங்களுக்கு எங்களுடைய பேருந்து நிலையம் போதுமானது எமது பேருந்து நிலையத்தை கட்டித் தருமாறு நாங்கள் யாரிடமும் கோரவில்லை. எமது பேருந்து வீதிகளில் தரித்து நிற்கவில்லை எமது வளாகத்தில் தரித்து நின்றே செயலாற்றுகின்றது. 10 மில்லியன் ரூபாய் வடக்கின் வசந்தம் திட்டத்தில் எமது பேருந்து நிலையம் சிறப்பாக அமைக்கபட்டுள்ளது. பொதுமக்களோ பொது அமைப்புக்களோ எமது பேருந்து தரிப்பு நிலையத்திற்கு எதிராக எந்த முறைப்பாடும் வழங்கவில்லை.
வவுனியாவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. அதில் ஒரு பகுதியையாவது பிரித்து தாருங்கள் என எமது இ.போ.ச தொழிலாளிகள் கோரிக்கை விடுத்தனர். அவர்களுடைய கோரிக்கை இன்னமும் நிறைவேற்றப்படாது உள்ளது. இவ்வாறன நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் தனியாருடன் இணைந்த சேவையில் ஈடுபட எமது தொழிலாளர்களுக்கு பிரச்சினைகள் காணப்படுகின்றது.
இது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் தொழிலாளர்களை அழைத்து பிணக்குகளை தீர்ப்பாரானால் எதிர்காலத்தில் இணைந்து செயல்படுவது தொடர்பில் சிந்திக்க முடியும். ஆகவே இந்த தொழிற்சங்கங்களை அழைத்து கதைத்து அதற்குரிய தீர்வுகளை வடக்கு ஆளுநர் வழங்க வேண்டும் அதன் பின்னரே இதற்கான முடிவுகளை எட்ட முடியும்.
இலங்கை போக்குவரத்து சபையினுடைய யாழ் மத்திய பேருந்து நிலையத்தை முதலிலும் கையகப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதாவது மேலாக பாதையொன்றினை அமைத்து வைத்தியசாலையினுள் நுழையவும் கீழ்பகுதி பேருந்து நிலையமாகவும் மற்றும் கடைத் தொகுதிகளை அமைப்பது தொடர்பிலும் பேசப்பட்டது. பின்னர் அது கைவிடப்பட்டுள்ளது.
கொழும்பிலே மத்திய பேருந்து நிலையம் தனியார் பேருந்துகளுக்கு தனியாகவும் இலங்கை போக்குவரத்து சபையினருக்கு தனியாகவும் செயற்படுகின்றது. அதேபோல இங்கும் எமக்கான பேருந்து நிலையம் விசேடமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
தனியாருக்கு பேருந்து நிலையத்தை வழங்க முடியாது உங்களை அவர்களுக்காக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தில் செல்லுமாறு திணிப்பது எந்த விதத்திலும் நியாயமான ஒன்று அல்ல. ஆளுநருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுகின்ற பொழுது அவர் அவ்வாறு செயற்படலாம்.
ஆளுநருடன் கதைக்கப்பட்ட சில விடயங்கள் இங்கே சுட்டிக்காட்டப்படாது செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஏற்கனவே வடமாகாண சபையின் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் டெனிஸ்வரனால் தயாரிக்கப்பட்ட இணைந்த நேர அட்டவணை அமல்படுத்தப்படாது உள்ளது. கடந்த ஆட்சியில் அந்த நேர அட்டவணையும் பிழையென கூறி எமது தரப்பினர் சிலர் இணைந்து இணைந்த நேர அட்டவணையை தயாரித்திருந்தனர். அதுவும் நடைமுறைப்படுத்தப்படாது உள்ளது.