பிரித்தானிய பெண் ஒருவரின் கடன் அட்டைகளை திருடி, ஹட்டன் நகரில் உள்ள பல வர்த்தக நிலையங்களில் இருந்து சுமார் இரண்டரை இலட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வாங்கிய சந்தேக நபர் ஒருவர் ஹட்டன் பொலிசாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) கைது செய்யப்பட்டார்.
புத்தளத்தைச் சேர்ந்த 22 வயதுடைய சந்தேக நபர், ஹட்டன் மற்றும் தலவாக்கலை ரயில் நிலையங்களுக்கு இடையில் கண்டியில் இருந்து எல்ல நோக்கி ஞாயிற்றுக்கிழமை (19) பயணித்த சிறப்பு ரயிலில் பிரயாணம் செய்த பிரித்தானிய பெண்ணின் பயணப் பையைத் திருடி சென்றுள்ளார்.
அதன்பின்னர் சந்தேக நபர் ரயிலில் இருந்து இறங்கி ஹட்டன் நகரத்தை வந்தடைந்து. திருடப்பட்ட கிரெடிட் கார்டுகளை (கடன் அட்டைகளை) பயன்படுத்தி தங்க நெக்லஸ், ஒரு மதிப்புமிக்க மொபைல் போன் மற்றும் ஆபரணங்கள், ஆடைகள், காலணிகள் மற்றும் பல உணவுப் பொருட்களை என்பவற்றை ஹட்டன் நகரில் வாங்கியுள்ளார்.
வாங்கிய நெக்லஸ் ஹட்டன் நகரில் உள்ள ஒரு தனியார் அடகுக் கடையில் அடகு வைக்கப்பட்டு 78,000 ஆயிரம் ரூபாவை பெற்றுக் கொண்டுள்ளார்.
எல்ல ரயில் நிலையத்திற்கு பயணித்த ஒரு பிரித்தானிய பெண், தனது வங்கி அட்டைகள் தொலைந்து போயுள்ளதாக எல்ல ரயில் நிலையத்தில் உள்ள சுற்றுலா காவல்துறையிடம் புகார் அளித்தார். சுற்றுலா காவல்துறையினர் இந்த விஷயம் குறித்து ஹட்டன் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
ஹட்டன் காவல் நிலையம், அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் ஹட்டன் தலைமையக தலைமை இன்ஸ்பெக்டர் ரஞ்சித் ஜயசேன, காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் நுவான் மதுசங்க உள்ளிட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்,
இந்நிலையில், ஹட்டனில் இருந்து எல்ல வரைக்கும், பயணிப்பதற்கு ஒருவர் வாகனமொன்றை வாடகைக்கு அமர்த்துவது தொடர்பில் ஹட்டன் பொலிஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை (19) இரவு தகவல் கிடைத்தது.
விரைந்து செயற்பட்ட பொலிஸார் அவரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்திய போது, பிரித்தானிய பெண்ணின் காணாமல் போன கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வாங்கிய பொருட்கள் மற்றும் 38,890 ரூபாய் ஆகியவற்றையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர். சந்தேக நபரிடமிருந்து உள்ளூர் நாணயத்தாள்கள் மற்றும் இரண்டு வெளிநாட்டு நாணயத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சம்பவம் குறித்து புகார் அளித்த பிரிட்டிஷ் பிரஜை ஹட்டன் காவல் துறைக்கு வர வைக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர் வாங்கிய அட்டைகள் மற்றும் பொருட்களின் மதிப்பை சம்பந்தப்பட்ட கடைகளில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஹட்டன் காவல்துறை தலைமையக தலைமை ஆய்வாளர் ரஞ்சித் ஜயசேன தெரிவித்தார்.
சந்தேக நபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.