வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போதுள்ள மழையுடனான வானிலை தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மி.மீ.க்கும் அதிகளவான கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வட மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்100 மி.மீ.க்கும் மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஏனைய பகுதிகளில் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேலும், மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடுவதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில பகுதிகளில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட நீர்ப்பாசனத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நேற்று (18) இரவு முதல் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளில் பெய்த மழை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று மற்றும் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட முந்தேனி ஆற்றுப்படுகையின் தாழ்வான பகுதிகளிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, அந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், வெள்ளப்பெருக்கிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மல்வத்து ஓயா படுகையின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு காரணமாக, தந்திரிமலையிலிருந்து கீழ் பகுதிகளில் நீர் மட்டம் வெள்ள மட்டத்தை அண்மித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலை காரணமாக, வெங்கலச்செட்டிகுளம், மடு, முசலி மற்றும் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
அந்தப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், அந்தப் பகுதிகள் வழியாகப் பயணிக்கும் வாகன சாரதிகளும் இந்த நிலை குறித்து மிகுந்த அவதானம் செலுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலையால் நான்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த 15ஆம் திகதி முதல் பெய்து வரும் கனமழை காரணமாக அநுராதபுரம், கிளிநொச்சி, கேகாலை மற்றும் காலி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அந்த மாவட்டங்களில் 319 குடும்பங்களைச் சேர்ந்த 603 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கேகாலை மற்றும் காலி மாவட்டங்களில் நிலவும் மோசமான வானிலை காரணமாக 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மாவட்டங்களில் 71 குடும்பங்களைச் சேர்ந்த 200 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மண்சரிவுகள் தொடர்பான முன்கூட்டியே எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தொடர்புடைய எச்சரிக்கை அறிவிப்பு, இன்று (19) காலை 8:00 மணி முதல் நாளை காலை 8:00 மணி வரை அமுலில் இருக்கும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அதன்படி, கண்டி மாவட்டத்தில் உடுதும்பர, மாத்தளை மாவட்டத்தில் யட்டவத்த, உக்குவெல, இறத்தோட்டை மற்றும் வில்கமுவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், பதுளை மாவட்டத்தில் பதுளை, பசறை, ஹாலி எல, கண்டி மாவட்டத்தில் மெததும்பர, பாத்ததும்பர, தொலுவ, குருநாகல் மாவட்டத்தில் ரிதீகம, லக்கல பல்லேகம, அம்பன்கங்க கோரள, மாத்தளை மாவட்டத்தில் பல்லேபொல, மாத்தளை மற்றும் நாவுல பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை சேனாநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டம் (2025.01.19) காலை 106.6 அடிவரையாக காணப்படுகிறது. இதற்கமைய, இன்று காலை 8.00 மணிக்கு சமுத்திரத்தின் 5 கதவுகள் 6 அங்குலங்கள் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது திறந்து சில மணித்தியாலங்களின் பின்னர் மீண்டும் 12″ உயரத்திற்கு வான்களவுகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணத்தினால் அம்பாறை, தமண, உகன, சம்மாந்துறை காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, நாவிதன்வெளி, அட்டாளச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு போன்ற பகுதிகள் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைநீரால் மூழ்கக்கூடிய பாதைகள் தொடர்பில் பொலிஸாருடன் கலந்துரையாடி அவற்றை மூடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.