மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் விழுந்து காணாமல் போன நான்கு வயது குழந்தையின் சடலம் இன்று (17) பிற்பகல் நீர்த்தேக்கத்தின் அடிப்பகுதியில் சிக்கி உள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
நான்கு வயது குழந்தையுடன் தாய் ஒருவர் நேற்று (16) மாலை தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் உயிர்மாய்ப்பு செய்யும் நோக்கில் குதித்ததாகவும், குழந்தை நீரில் மூழ்கி காணாமல் போனதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
துரதிஷ்டவசமாக தலவாக்கலை தேவ்சிறிபுர பகுதியைச் சேர்ந்த தனுஷன் (04) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாக்கலை பொலிஸ் உத்தியோகத்தர்கள், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் பொறுப்பதிகாரிகளும் பிரதேசவாசிகளும் இணைந்து நீர்த்தேக்கத்தின் அடிப்பகுதியில் சேற்றில் சிக்கியிருந்த குழந்தையின் சடலத்தை மிகுந்த பிரயத்தனத்துடன் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.
சிறு குழந்தையுடன் நீர்த்தேக்கத்தில் குதித்த தாயை இளைஞன் ஒருவர் காப்பாற்றி சிகிச்சைக்காக லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்த போதும் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் குழந்தையுடன் குதித்ததை இளைஞன் ஒருவர் கண்டதாகவும், உடனடியாக நீர்த்தேக்கத்தில் குதித்து நீரில் அடித்துச் செல்லப்பட்ட தாயை காப்பாற்றியதாகவும், ஆனால் அந்த இளைஞனால் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குடும்பத் தகராறு காரணமாக தானும் தனது குழந்தையும் உயிர்மாய்ப்பு செய்து கொள்ளும் நோக்கில் நீர்த்தேக்கத்தில் குதித்ததாக பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.