வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் பொலனறுவை மாவட்டத்தின் சில இடங்களிலும் 50 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடமேல் மாகாணத்திலும் அத்துடன் கொழும்பு மற்றும் ஹம்பகா மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது,
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
கொழும்பு தொடக்கம் புத்தளம் ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 – 60 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.