இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்குப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும், பயங்கரவாதக் குற்றத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரிடம் அவரை ஒப்படைக்குமாறு தமக்குப் பணிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்த குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் நீண்ட நேர விசாரணைகளின் பின்னர் அவரைப் தமிழகப் பயணத்துக்கு அனுமதித்திருந்தனர்.
இன்றும், நாளையும், சென்னை – நந்தம்பாக்கத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள அயலகத் தமிழர் தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளும் பொருட்டு, நேற்றுப் பயணத்துக்காகக் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றபோதே நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், நீண்ட நேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
குறித்த பயணத்துக்கு அனுமதிக்க முடியாது என்ற அடிப்படையில் நடைபெற்ற நீண்ட நேர விசாரணைகளின்போது, தமிழகப் பயணத்துக்காக வருகை தந்த முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் பல்வேறு பிரயத்தனங்களை முன்னெடுத்ததன் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தமிழகம் செல்ல அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.