மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு செல்லும் பிரதான சாலைகளில் உள்ள அனைத்து மின் கம்பங்களிலும் உள்ள மின் குமிழ்கள் ஒளிராத காரணத்தால் இரவு நேரத்தில் வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள் மற்றும் பணி புரியும் சிற்றூழியர்கள், தாதியர்கள், வைத்தியர்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர்.
வைத்தியசாலைக்கு அருகில் உள்ள இல்லங்களுக்கு செல்லும் வழியில் வீதிகள் மிகவும் அவலமாக உள்ள நிலையில் உள்ளது. அத்துடன் வைத்தியசாலையை அண்டியுள்ள பகுதிகள் பாரிய அளவில் பற்றைக் காடாக உள்ளது. இதனால் இரவு நேரத்தில் பன்றிகள் மற்றும் சிறுத்தை ஆகியவற்றின் பயத்துடன் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டியுள்ளது என வைத்தியசாலையில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
இவ் வைத்தியசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் வைத்தியசாலை வட்டாரத்தில் உள்ள சகல மின் கம்பத்திலும் மின் குமிழ்கள் பொருத்தப்பட்டு இருந்தன.
குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக அவற்றை மஸ்கெலியா மின்சார சபை அகற்றியது.
எது எப்படியாயினும் பெருந்தோட்ட மக்கள் செறிந்து வாழும் மஸ்கெலியா பகுதி வைத்தியசாலையில் ஆளணிப் பற்றாக்குறை மற்றும் மாவட்ட வைத்தியசாலையை கிராமிய வைத்தியசாலையாக தரம் குறைத்தமை போன்றவையுடன் சகல வசதிகளும் கொண்ட இந்த நான்கு மாடி வைத்தியசாலையை தரமுயர்த்த வேண்டும் என இப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.