விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு சந்தைகளில் பத்து சத வீதக் கழிவு அறவிடும் நடைமுறை அடுத்த ஆண்டு ஜனவரியிலிருந்து முழுமையாக ஒழிக்கப்படவேண்டும். அதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்குப் பணித்துள்ளேன். இந்த விடயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வடக்கு மாகாண விவசாயத் திணைக்களமும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் துறைசார் மீளாய்வுக் கூட்டம் ஆளுநர் செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை (20.12.2024) ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது.
‘1970ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் எமது மாகாணம் விவசாயத்தில் கோலோச்சியதைப்போன்ற நிலைமை மீண்டும் ஏற்பட வேண்டும். தற்போதைய சூழலுக்கு ஏற்ப எமது விவசாய முறைமைகள் மாற்றமடையவேண்டும். இளையோரிடத்திலும் விவசாயத்தை ஊக்குவிக்கவேண்டும்’ என ஆளுநர் தனது ஆரம்ப உரையில் சுட்டிக்காட்டினார்.
வடக்கு மாகாண விவசாயத்துறை மேம்பாட்டுக்காக வழங்கப்படும் உபகரணங்களை உச்ச அளவில் பயன்படுத்தவேண்டும் என வலியுறுத்திய ஆளுநர் அதன் ஊடாக ஏற்றுமதியை நோக்கி உற்பத்தியை அதிகரிக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
எத்தனை விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை ஓராண்டில் உயர்த்த முடியும் என்ற இலக்கை நிர்ணயித்து விவசாயத் திணைக்களம் செயற்படவேண்டும் என்றும், 2025ஆம் ஆண்டு அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு சாதகமான நிலைமைகள் காணப்படுவதால் அதைச்சரிவரப் பயன்படுத்த வேண்டும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
அதேநேரம் எமது பிரதேசத்திலுள்ள ஏழைகள் இன்றும் ஏழையாக இருப்பதற்கு அதிகாரிகளே காரணம் எனத் தெரிவித்த ஆளுநர், எங்களால் செய்ய முடியாதது என்று எதுவுமில்லை என்ற எண்ணம் அதிகாரிகளிடத்தில் மலரவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
வடக்கு மாகாணம் நெல் உற்பத்தியில் தன்னிறைவு நிலையில் உள்ளதாக விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார். அத்துடன் சின்ன வெங்காயத்துக்கு நிர்ணயவிலையை விவசாயிகள் கோருவதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை கடந்த அனர்த்தங்களின்போது நெற்பயிரழிவு தொடர்பான சேத விவரங்களை 4 திணைக்களங்கள் இணைந்து மீளாய்வு செய்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் விவசாயிகள் தமது உற்பத்திக்கான செலவு அதிகரித்துச் செல்வதாகக் குறிப்பிடுகின்றனர் எனவும், வன விலங்குகளால் ஏற்படும் சேதமும் அதிகரித்தே செல்வதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர், எலிக்காய்ச்சல் விலங்குகளுக்கும் பரவும் நிலை ஏற்பட்டிருப்பது தொடர்பிலும் அதைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாகவும் விளக்கமளித்தார்.
மேலும் சாரதிகள், தொழில்நுட்ப அலுவலர்கள் பற்றாக்குறை தொடர்பிலும் திணைக்களத் தலைவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு ஆளுநர் மற்றும் பிரதம செயலர் ஊடாக தீர்வு முன்வைக்கப்பட்டது.
இறுதியில், அடுத்த ஆண்டு புத்தாக்க சிந்தனையுடன் திட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டும் என்றும் ஒதுக்கப்படும் நிதி எந்தக் காரணம் கொண்டு திரும்பிச் செல்வதற்கு அனுமதிக்கக் கூடாது எனவும் ஆளுநர் வலியுறுத்தினார்.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலராகப் பதில் கடமையாற்றும் திருமதி எழிழரசி அன்ரன்யோகநாயகம், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலர் ஆ.சிறி, விவசாய திணைக்களப் பணிப்பாளர் திருமதி சு.செந்தில்குமரன், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி எஸ்.வசீகரன், நீர்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் எந்திரி கஸந.சுதாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.