முச்சக்கரவண்டியின் சாரதியை தாக்கி காட்டுக்குள் தள்ளிவிட்டு, முச்சக்கரவண்டியை கடத்திச் சென்ற இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்பளை பகுதியிலேயே நேற்று மதியம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கம்பளை நகரிலிருந்து அம்புலாவ பகுதிக்கு செல்ல வேண்டும் எனக்கூறி இரு நபர்கள், வாடகை முச்சக்கரவண்டி ஒன்றில் ஏறியுள்ளனர். முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருக்கையில், அம்புலாவ, கல்பங்கலாவ பகுதியில் வைத்து, முச்சக்கரவண்டி சாரதியின் ஜெக்கட்டை எடுத்து அவரின் கழுத்தை நெரித்து அவரை அடித்து காட்டு பகுதியில் தள்ளிவிட்டு, முச்சக்கரவண்டியை கடத்தியுள்ளனர்.
வேகமாக முச்சக்கரவண்டியை ஓட்டிச்செல்கையில், எம்மாத்தகம பகுதியில் இருந்து அம்புலாவ பகுதிக்கு வந்த காரொன்றுடன் மோதி முச்சக்கரவண்டியானது விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தையடுத்து முச்சக்கரவண்டியைக் கடத்திய இருவரும், காட்டுக்குள் பாய்ந்து தலைமறைவாகியுள்ளனர்.
குறித்த விடயம் பிரதேச மக்களுக்கு தெரியவந்ததையடுத்து, பிரதேச மக்கள் இரவு முழுவதும் தேடும் பணியில் ஈடுப்பட்டு இரு சந்தேக நபர்களையும் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இரு சந்தேக நபர்களும் கம்பளை, எக்கால்ல பகுதியை சேர்ந்த 23 மற்றும் 25 வயதுகளுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.