அரச அதிகாரிகளை கண்ணியத்துடன் நடத்த வேண்டும். அவர்களைஅணுகுவதற்கு ஒரு முறை உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நேற்று முன்தினம் (13) இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் நாடளுமன்ற உறுப்பினர் ஒருவரால், அரசஅதிகாரிகள் தரக்குறைவாக நடத்தப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
அரச அதிகாரிகளாக இருப்பவர்கள் எங்களை விட கல்வித்தரத்தில் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். கற்றறிந்துதான் அவர்கள் அந்தப் பதவிகளுக்கு வந்திருக்கிறார்கள். ஊடகவியலாளர்களுக்கும் எங்களை விட ஊடகத்துறையில் அனுபவம் கூடுதலாகவே இருக்கும். ஆகவே என்னைப் பொறுத்த வரைக்கும் நாங்கள் அவர்களை அணுகுவதற்கான முறை இருக்கிறது.
மனிதாபிமானத்தையும் மனித மூலதனத்தையும் எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பிலும் நாங்கள் மிகவும் கண்ணியத்தோடும் பொறுப்போடும் நடக்க வேண்டும். எங்களுடைய கட்சி இதுவரை காலமும் அவ்வாறு தான் நடந்திருக்கிறது. தொடர்ந்தும் அந்த பொறுப்போடும் கண்ணியத்தோடும் அரச உத்தியோத்தர்களோடு அணுகிச் செயற்படுவோம் – என்றார்.