கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை எழுந்ததையடுத்து சபாநாயகர் அசோக ரன்வல தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு கடிதம் ஒன்றை அவர் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
“கடந்த சில நாட்களாக என்னுடைய கல்வி அடைவு சம்மந்தமாக வாத விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. நான் எந்த இடத்திலும் பொய்யான தகவல்களை வழங்கவில்லை.
ஆனால் அந்த கல்வித்தகைமையை உறுதி செய்ய கூடிய ஆவணங்கள் என்னிடம் இல்லை. அதனை சம்மந்தப்பட்ட நிறுவனங்களில் இருந்தே பெற வேண்டியுள்ளது. எனவே அது இப்போதைக்கு கடினமான விடயம்.
எனக்கு பேராசிரியர் பட்டம் தந்த ஜப்பான் வசேதா பல்கலைகழகத்தோடு இணைந்த ஆவணங்களை என்னால் முன்வைக்க முடியும். அதனை நான் விரைவில் முன்வைப்பேன்.
ஆனால் எழுந்துள்ள நிலைமையை கருத்திற்கொண்டு எங்கள் மீது நம்பிக்கை வைத்த மக்கள் நிர்கதிக்குள்ளாகாமல் இருக்க நான் ஏற்றுள்ள சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். ” எனக் குறிப்பிட்டுள்ளார்.