தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகிய குறைந்த காற்றழுத்த மண்டலம், அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு – வடமேற்குத் திசையில் நகர்ந்து இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் தமிழக கடற்கரையை நெருங்க வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், வடக்கு மாகாணத்தில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படும் அதேவேளை, மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை, கொழும்பு ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து வடமேற்குத் திசையை நோக்கி காற்று வீசும். திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக புத்தளம் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 – 60 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும்.
புத்தளம் தொடக்கம் கொழும்பு ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் காற்று வீசும்.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தைக் குறைப்பதற்குப் பொதுமக்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.