இலங்கை வரலாற்றில் மிக மோசமான விமான விபத்து இடம்பெற்ற 50 வருட பூர்த்தியை ஒட்டி நோட்டன்பிரிட்ஜ் விமலசுரேந்திர நீர்த்தேக்கத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில், விபத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூறி ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் மற்றும் முச்சக்கரவண்டி சங்க உறுப்பினர்கள் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
டிசம்பர் 4, 1974 அன்று, மார்ட்டின் ஏர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான DC 08 விமானம் இந்தோனேசியாவின் சுரவேயார் விமான நிலையத்திலிருந்து மக்காவை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த நிலையில் இரவு 10:10 மணியளவில், நோட்டன் பிரிட்ஜ் ஏழு கன்னியர் மலை உச்சியில் மோதியதில் அதில் பயணித்த 182 பேர் மற்றும் 09 ஊழியர்கள் உயிரிழந்தனர்.
அந்த விமானத்தின் ஒரு டயர் நோட்டன் பிரிட்ஜ் விமலசுரேந்திர நீர் தேக்கத்திற்கு அருகில் நினைவுச் சின்னமாக வைக்கப்பட்டுள்ளதுடன் அதன் கீழ் பகுதியில் ஊழியர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும், இதன் போது நினைவிடத்திற்கு முன்பாக மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி, இறந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த விபத்து இடம் பெற்று 50 வருடங்கள் பூர்த்தியானாலும் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 4 ம் திகதி அன்று நோட்டன் பிரிட்ஜ் விமல சுரேந்திர நீர் தேக்கங்களின் மதகு பகுதியில் விமானத்தின் சில்லு காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் பகுதியில் இந்தோனேசியா நாட்டின் இலங்கை தூதுவர் மற்றும் மரணித்த அவர்களின் உறவினர்கள் வருகை தந்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு தொடர்ச்சியாக இடம் பெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.