கண்டி புகையிரத நிலையத்தில் புகையிரதப் பாதை கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடும் ஊழியர் ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.
அளவத்தேகம, கல்லேல்ல என்ற பகுதியைச் சேர்ந்த டக் ஒப்பரேட்டராக பணிபுரியும் 58 வயது நபர் ஒருவரே உயிரிழந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
அவர் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில் தேநீர் குடிப்பதற்காக புகையிரத மார்க்கத்தின் வழியாக வந்துள்ளார். அச்சமயம் கடுகதிப் புகையிரதமொன்று பேராதனையிலிருந்து கண்டி நோக்கி வருவதைக் கண்டு, அவர் மற்றொரு புகையிரத மார்க்கத்துக்கு சடுதியாக மாறியுள்ளார். அவ்வேளை அந்த மார்க்கத்தில் பயணித்த புகையிரத எஞ்சினில் மோதுண்டு கடும் காயங்களுக்கு உள்ளான நிலையில், கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.