பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், வேட்பாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் செயலாளர்கள், சுயேட்சைக் குழுக்களின் தலைவர்கள் தங்களது தேர்தல் செலவு அறிக்கையை எதிர்வரும் 6ஆம் திகதி நள்ளிரவுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட தேர்தல் செலவுகளைக் கண்காணிக்கும் சட்டத்தின் பிரகாரம் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தமது செலவு அறிக்கையை மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தேசியப் பட்டியல் வேட்பாளர்கள் தமது செலவு அறிக்கைகளைத் தேர்தல் செயலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ உரிய அறிக்கைகளை ஒப்படைக்காவிட்டால் தேர்தல் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்றும், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.