மன்னார், பேசாலை பொலிஸ் நிலையத்தில் கஞ்சா கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு சந்தேக நபர்களில் ஒருவர் பொலிஸ் நிலைய சிறைக் கூண்டிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) தப்பிச் சென்றுள்ளதாக பேசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பிச் சென்றவர் பேசாலை, பெரியகர்சல் பகுதியில் வசிக்கும் 28 வயதுடைய மீனவர் ஆவார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
மன்னார் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 6 கிலோ 120 கிராம் கேரள கஞ்சாவுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் கீழ் பேசாலை பொலிஸ் நிலையத்தின் சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களில் ஒருவர் குளிப்பதற்காக குளியலறைக்குச் சென்று, குளியலறையின் ஜன்னல் வழியாக தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.