கொழும்பு – கண்டி வீதியில் களனி பாலத்துக்கு அருகில் நேற்று சனிக்கிழமை (30) துவிச்சக்கரவண்டியுடன் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் இருந்த நபர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களனியை தற்காலிக வசிப்பிடமாகக் கொண்ட அம்பாறையைச் சேர்ந்த 49 வயதுடையவர் நபரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
குறித்த நபர் பேலியகொடையில் இருந்து கொழும்பு நோக்கி துவிச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்தபோது வீதி விபத்தொன்றில் சிக்கி காயமடைந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
நபரொருவர் பலத்த காயங்களுடன் வீதியில் கிடப்பதாக பேலியகொட பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலையடுத்து உடனடியாக செயற்பட்ட போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு குறித்த நபரை கொண்டுசென்றுள்ளனர். அதன் பின்னரே அவர் உயிரிழந்துள்ளார்.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பேலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.