மண்மீதும், மக்கள் மீதும் பற்றுக்கொண்டு தமிழீழ கனவோடு தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவு கொள்ளும் புனித நாளான இன்று (November 27) பிரித்தானியத் தலைநகர் லண்டனில் அமைந்துள்ள ஈகைப்பேரொளி முருகதாசனின் நினைவுக் கல்லறையில் மக்கள் கூடி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.இன்று காலை 10:00 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்தின பாடல் ஒலிக்கவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவீரர்களை நினைந்து அகவணக்கம் செலுத்தியதை அடுத்து ஈகைப்பேரொளி முருகதாசன் கல்லறைக்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.பொதுச்சுடரினை மாவீரர் மலர் அவர்களின் சகோதரன் அவர்கள் ஏற்றிவைக்க, ஈகைச்சுடரினை முருகதாசனின் தந்தை ஏற்றிவைத்தார். மலர்மாலையினை ஈகைப்பேரொளி முருகதாசனின் தாயாரும், சகோதரியும் அணிவித்தனர்.அதைத்தொடர்ந்து மக்கள் வரிசைக்கிரமமாக சென்று தேசப்புதல்வர்களை நெஞ்சில் நிறுத்தி மலர்தூவி, சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.