தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தாழமுக்கமாக வலுவடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இது மேலும் வலுவடைந்து இலங்கையின் கிழக்கு கரையைக் கடந்து வட மாகாணத்தை ஊடறுத்து தமிழகத்தை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையினால் இன்று முதல் மறு அறிவித்தல் வரை நாட்டை சூழ உள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கு மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தின் சில இடங்களில் 150 மில்லிமீற்றரிலும் கூடிய மிகப் பலத்த மழை பெய்யக்கூடும். வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 35 – 45 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 – 50 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும். காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 60 – 70 கிலோமீற்றராக அடிக்கடி அதிகரித்துக் காணப்படும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.