இயக்கச்சியில் விழுந்து காணப்படும் மின்சார வயரை சரிசெய்ய எழுபதாயிரம் கோரும் மின்சார சபை-மக்கள் குற்றச்சாட்டு
கிளிநொச்சி இயக்கச்சி சங்கத்தார் வயல் பகுதியில் விழுந்து கிடக்கும் மின்சார வயரை சரிசெய்ய மின்சார சபை எழுபதாயிம் கேட்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்
இது தொடர்பாக சங்கத்தார் வயல் பகுதியில் வசிக்கும் மக்கள் சிலர் நேற்று 23.11.2024 ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போது
மின்சார தூண் விழும் நிலையில் காணப்படுவதால் குறித்த தூணை மாற்றுமாறு பல முறை கோரிக்கை விடுத்துவருகின்றோம்.ஆனாலும் மின்சார சபை அலட்சியமாக இருக்கின்றது.
இந்த பிரதான வீதியால் பல வீடுகளுக்கு மின்சாரம் செல்லுகின்றது.தூண் ஒன்று சரிந்து காணப்படுவதால் மின்சார வயர்கள் நிலத்தில் விழுந்து காணப்படுகின்றது.வீட்டிற்கு செல்லும் பாதைகளில் மின்சார வயர்கள் விழுந்து கிடக்கின்றது.
பல குடும்பங்கள் கைக்குழந்தைகளுடனும் சிறுவர்களுடனும் இருக்கின்றோம்.எமது பிள்ளைகள் ஆபத்து அறியாமல் மின்சார வயர்களை பலமுறை தொட்டுள்ளார்கள்.
மழைகாலத்தில் மிகவும் பயமாகவும் ஆபத்தாகவும் இருக்கின்றது.
மின்சார வயர்கள் நிலத்தில் விழுந்து கிடப்பதால் மின்சார ஒழுக்கால் தொலைக்காட்சி உட்பட,குளிர்சாதன பெட்டிகள் பழுதடைந்துள்ளன.
தூண் ஒன்றை நிறுவி விழுந்து காணப்படும் மின்சார வயர்களை சரி செய்து தருமாறு பலமுறை கோரியும் மின்சார சபை எங்களிடம் பணம் கேட்கின்றார்கள்
எழுபதாயிரம் ரூபாய் தந்தால்த்தான் தூண் ஒன்றை நிறுவி விழுந்து காணப்படும் வயர்களை சரி செய்து தருவதாக அவர்கள் தெரிவிக்கின்றார்கள் .எம்மிடம் அவ்வளவு பணம் இல்லை மிக வறுமைக்குள் வாழ்கிறோம்.எமது கிராம அலுவலருக்கும் தெரியப்படுத்தியுள்ளோம்
தொடர் மழையால் அவதிப்படும் சூழலில் வீட்டு வாசலில் விழுந்து காணப்படும் மின்சார வயர்களால் உயிர் அச்சம் ஏற்பட்டுள்ளது
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து உடனடியாக எமது பகுதியை பார்வையிட்டு விழுந்து காணப்படும் இந்த மின்சார வயர்களை சீர் செய்து தருமாறு கேட்டுக் கொள்வதாக தெரிவித்தனர்.