சம்பத்நுவர பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபரொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று புதன்கிழமை (20) காலை உயிரிழந்துள்ளதாக வெலிஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் மயிலபிட்டிய, அபோன்சுவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
உயிரிழந்தவர் தனது வீட்டிற்கு அருகில் பேக்கரி ஒன்றை நடத்தி வந்துள்ள நிலையில் பேக்கரியில் உள்ள மின் விளக்கின் மின் இணைப்புக் கம்பியில் சிக்கி மின்சாரம் தாக்கி காயமடைந்துள்ளார். இதனையடுத்து, காயமடைந்தவர் சம்பத்நுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதவிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.