மன்னார் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்புகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்றைய தினம் வியாழன் (14) 4 மணியுடன் தபால் மூல வாக்களிப்பு உள்ளடங்களாக 74 வீத வாக்கு பதிவு இடம் பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் 63 ஆயிரத்து 307 பேர் இன்றைய தினம் (14) வாக்களித்துள்ளனர். தபால் மூல வாக்களிப்பையும் உள்ளடக்கிய 67 ஆயிரத்து 433 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இது மொத்த வாக்காளர்களில் 74 வீதமாக காணப்படுகின்றது.
தற்போது வாக்களிப்புகள் நிறைவு பெற்று வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்கு எண்ணும் நிலையமான மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு கொண்டு வரப்பட்டது . இரவு 10 மணிக்கு முன்னர் முதலாவது நிலவரத்தை அறிய தர முடியும் என அவர் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்ற நிலையில் வாக்களிப்புகள் 98 வாக்களிப்பு நிலையங்களில் இடம் பெற்றது.
தற்போது மன்னார் மாவட்டச் செயலகத்தில் உள்ள 8 வாக்கு என்னும் நிலையங்களில் வாக்குகள் என்னப்பட உள்ளது.