கொக்கைன் போதைப்பொருளுடன் சியராலியோன் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 32 வயதுடைய சியராலியோன் பிரஜை ஆவார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
சந்தேக நபர் துருக்கியின் இஸ்தான்புல் நகரத்திலிருந்து நேற்றைய தினம் அதிகாலை 05.49 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். பின்னர், சந்தேக நபர் “கிரீன் சேனல்” வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முற்பட்ட போது சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது, சந்தேக நபர் கொக்கைன் போதைப்பொருளை விழுங்கி வயிற்றில் சேகரித்து வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சந்தேக நபரின் வயிற்றிலிருந்து 56 கொக்கைன் மாத்திரைகள் வெளியேற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட கொக்கைன் போதைப்பொருளின் மொத்த பெறுமதி சுமார் 430,000 ரூபா ஆகும்.
சந்தேக நபர் சுமார் 80 கொக்கைன் மாத்திரைகளை விழுங்கியுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, சந்தேக நபரின் வயிற்றில் எஞ்சியுள்ள கொக்கைன் மாத்திரைகளை அகற்றுவதற்கான முயற்சிகளை நீர்கொழும்பு பொது வைத்தியசாலை வைத்தியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.